

ஐதராபாத்
போதைப்பொருள் இல்லா சமூகம் என்ற இலக்கை முன்னெடுத்து, மூதாட்டி 3 ஆயிரம் கி.மீ. சைக்கிள் பயணம் செய்கிறார்.
போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்தும் வகையில், 62 வயது மூதாட்டி ஒருவர் ஆந்திர பிரதேசத்தில் இருந்து புதுடெல்லி நோக்கி 3 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு சைக்கிள் பயணம் செய்கிறார். நாட்டு நலனுக்காக, நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்தும் வகையில், இளைஞர்களிடையே காணப்படும் போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் ஆபத்துகளை பற்றிய விழிப்புணர்வை பரப்பும் நோக்கில் இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது.
விஜயலட்சுமி என்ற அந்த பெண்ணின் பயணம், கடந்த அக்டோபர் 2-ந்தேதி தொடங்கியது. 50 நாட்களில் பயண தொலைவை அடைய இலக்கு நிர்ணயித்து உள்ள அவர், டிசம்பர் 10-ந்தேதி டெல்லியை சென்றடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 800 கி.மீ. தொலைவுக்கு அவர் பயணம் செய்துள்ளார். தொடர்ந்து பயணித்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக தெலுங்கானாவுக்கு வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரசாரத்தில் அர்ப்பணிப்புடனும், ஈடுபாட்டுடனும் செயல்படுவதற்காக அவருக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு, அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, நான் ஏன் இந்த திட்டத்தினை தேர்ந்தெடுத்திருக்கிறேன்? நான் ஒன்றும் சைக்கிள் வீராங்கனை அல்ல. இது சைக்கிள் யாத்திரையும் அல்ல. நாம்தான் பொறுப்பை கையில் எடுக்க வேண்டும்.
போதைப்பொருள் இல்லா சமூகம் உருவாவதற்கான ஒரு திட்டம் என்ற அடிப்படையில் இதனை நான் கையிலெடுத்து உள்ளேன். ஒவ்வொரு தாயும், தன்னுடைய குழந்தைகளை பற்றி நினைத்து பார்க்க வேண்டும். சில குழந்தைகளுக்காக நான் வருத்தப்படுகிறேன். போதைப்பொருளை ஒழிக்க நாம் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.
இதற்காக, பெற்றோர்களை நான் ஊக்குவிப்பேன். ஒரு லட்சம் குழந்தைகளை என்னுடைய இலக்காக வைத்திருக்கிறேன். கல்லூரிகளுக்கும் செல்கிறேன். இதுவரை 40 கல்லூரிகளுக்கு சென்றுள்ளேன். என்னிடம் சில குழந்தைகள், போதைப்பொருள் எதிர்ப்பு வீரர்களாக உருவாவோம் என கூறினர்.
இதனை கேட்டு நான் மகிழ்ச்சியடைந்தேன். போதைப்பொருள் இல்லாத மாநிலங்களை குழந்தைகள் உருவாக்குவார்கள் என்றும் அதில் பங்கெடுப்பார்கள் என்றும் நான் எதிர்பார்க்கிறேன் என்றார்.