சாக்லெட் வாங்கி தருவதாக கூறி.. சிறுமிகளை பலாத்காரம் செய்த 64 வயது முதியவர்

பெற்றோர் வேலைக்கு சென்ற நிலையில், பள்ளி முடிந்து வீட்டில் தனியாக இருக்கும் சிறுமிகளிடம் அவர் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
சாக்லெட் வாங்கி தருவதாக கூறி.. சிறுமிகளை பலாத்காரம் செய்த 64 வயது முதியவர்
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி என்கிற கிட்டி (வயது 64). இவர் தான் தங்கியிருக்கும் பகுதியில் சிறுமிகளை குறிவைத்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று வந்த 2-ம் வகுப்பு சிறுமி ஒருவரின் வீட்டில் ஆள் இல்லாததை அறிந்த முதியவர் சிறுமியை சாக்லெட் வாங்கி கொடுக்க அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பிய தனது பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பற்றி அழுதபடி கூறியுள்ளாள். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக ஆனேக்கல் போலீசில் முதியவர் கிருஷ்ணமூர்த்தி மீது புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், மேலும் 2 சிறுமிகளை அவர் சாக்லெட் தருவதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவலும் தெரியவந்தது. குறிப்பாக பெற்றோர் வேலைக்கு சென்ற நிலையில் பள்ளி முடிந்து வீட் டில் தனியாக இருக்கும் சிறுமிகளிடம் அவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர் மீது போக்சோ சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, முழுமையான விசாரணைக்குப் பிறகு நீதிமன்றக் காவலில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com