

கொச்சி,
மாலத்தீவில் இருந்து கடற்படை கப்பல் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த 187 பேர் உள்பட 698 இந்தியர்கள் கொச்சிக்கு அழைத்து வரப்பட்டனர்.
கொரோனா பாதிப்பின் காரணமாக வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்டு அழைத்து வரும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கி இருக்கிறது. அவர்கள் விமானங்கள் மற்றும் கப்பல்கள் மூலம் அழைத்து வரப்படுகிறார்கள்.
மாலத்தீவில் சிக்கி தவித்த இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதற்காக இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ்.ஜலஷ்வா என்ற கப்பல் அங்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாலத்தீவில் உள்ள மாலே துறைமுகம் போய்ச் சேர்ந்த அந்த கப்பல் அங்கிருந்து இந்தியர்களை ஏற்றிக் கொண்டு வெள்ளிக்கிழமை இரவு இந்தியா புறப்பட்டது. அந்த கப்பல் நேற்று காலை 9.30 மணிக்கு கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது.
அந்த கப்பலில் 595 ஆண்கள், 103 பெண்கள் என மொத்தம் 698 பேர் அழைத்து வரப்பட்டு இருக்கிறார்கள். இவர்களில் 10 வயதுக்கு உட்பட்ட 14 குழந்தைகள் மற்றும் 19 கர்ப்பிணிகளும் அடங்குவார்கள்.
அந்த கப்பலில் வந்தவர்களில் 440 பேர் கேரளாவையும், 187 பேர் தமிழ்நாட்டையும், 9 பேர் தெலுங்கானாவையும், தலா 8 பேர் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களையும், தலா 3 பேர் புதுச்சேரி, அரியானா, இமாசலபிரதேசம், மராட்டியம், ராஜஸ்தான் மாநிலங்களையும் சேர்ந்தவர்கள்.
இதுதவிர உத்தரகாண்ட், மேற்கு வங்காளம், கோவா, அசாம், டெல்லி, உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், ஜார்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் உள்ளனர்.
கொரோனா அறிகுறி உள்ளவர்கள் முதலில் கப்பலில் இருந்து இறக்கப்பட்டனர். அதன்பிறகு மற்றவர்கள் சிறு சிறு குழுக்களாக இறக்கப்பட்டனர். துறை முகத்தில் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
பின்னர் அவர்களுக்கு பி.எஸ்.என்.எல். சிம் கார்டுகள் வழங்கப்பட்டு, அதில் ஆரோக்கிய சேது செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டது.
துறைமுகத்தில் வழக்கமான நடை முறைகள் முடிந்ததும் கேரள அரசு பஸ்களிலும், டாக்சிகளிலும் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர். கொரோனா அறிகுறி உள்ளவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். மற்றவர்கள் தனிமைப்படுத்தும் மையங்களுக்கும், வீடுகளில் தனிமைப்படுத்தி வைப்பதற்காகவும் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து போலீஸ் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் செய்து இருந்தனர்.