ஜார்க்கண்ட்டில் 7 நக்சலைட்டுகள் கைது

நக்சலைட்டுகளிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஜார்க்கண்ட்டில் 7 நக்சலைட்டுகள் கைது
Published on

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலத்தில் வனப்பகுதியில் பதுங்கி இருந்த 7 நக்சலைட்டுகளை போலீசார் கைது செய்தனர். நக்சலைட்டுகளிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம், ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நடவடிக்கையால் பல நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை கைவிட்டு சரணடைந்து வருகின்றனர். சரணடைபவர்களுக்கு அரசு மறுவாழ்வு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. மேலும், நக்சலைட்டுகளை கைது செய்யும் நடவடிக்கையையும் பாதுகாப்புப்படையினர் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

நக்சலைட்டுகள் கைது

இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் ஹண்டி மாவட்டம் தில்மி வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் இன்று பாதுகாப்புப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்புப்படையினரை குறிவைத்து துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் நக்சலைட்டு முக்கிய தளபதி ஷர்வன் தாஸ் படுகாயமடைந்தார். இதையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்புப்படையினர் அங்கு பதுங்கி இருந்த 7 நக்சலைட்டுகளை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நக்சலைட்டுகளிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

X

Daily Thanthi
www.dailythanthi.com