

லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டம் போஜியா கிராமத்தைச் சேர்ந்த சானியா என்ற 7 வயது சிறுமி, மாலை நேரத்தில் தனது வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த ஒரு சிறுத்தை, அவளை தாக்கி, அருகில் உள்ள வயலுக்கு இழுத்துச் சென்றது.
சிறுமியின் தந்தையும், கிராம மக்களும் சிறுத்தையை விரட்டிச் சென்றனர். போலீசார் தகவல் அறிந்து வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதற் கிடையே, மறுநாள் காலையில், கரும்பு வயலில் சானியா சிதைந்த நிலை யில் பிணமாக கிடந்தாள். அவளது உடல், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுபோல், உத்தர பிரதேச மாநிலம் பரைச் மாவட்டம் பதையா கிராமத்தில் ரோஹித் என்ற 7 வயது சிறுவன், தனது வீட்டருகே உள்ள வயலுக்கு சென்று கொண்டிருந்தான். அங்கு மறைந்திருந்த சிறுத்தை, அவன் மீது பாய்ந்து தாக்கியது. அவனது அலறல் சத்தம் கேட்டு, குடும்பத்தினர் வந்தனர். உடனே அவனை சிறுத்தை வயலுக்கு இழுத்துச் சென்றது. பின்னர் அவன் சடலமாக கண்டெடுக்கப்பட்டான். சிறுத்தை தாக்கி சிறுவனும், சிறுமியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.