கட்டுமான தொழிலாளிகளின் 7 வயது மகள் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை; வேலை செய்த அதே கட்டிடத்தின் கீழ் உடல் கண்டெடுப்பு

சந்தேகத்தின் அடிப்படையில் 5 பேரைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கட்டுமான தொழிலாளிகளின் 7 வயது மகள் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை; வேலை செய்த அதே கட்டிடத்தின் கீழ் உடல் கண்டெடுப்பு
Published on

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் ஒரு வணிக வளாகத்தின் கட்டுமானப் பணி நடந்து வருகிறது. இதில் கட்டுமானப் பணியாளர்களாக வேலை செய்து வரும் தொழிலாளர்கள், அருகிலேயே ஒரு இடத்தில் குடில்களை அமைத்து தங்கியுள்ளனர். அவ்வாறு அங்கு தங்கியிருந்து வேலை செய்து வரும் ஒரு தம்பதியின் 7 வயது மகள், கடந்த வெள்ளிக்கிழமை(நேற்று) மாயமானார்.

அந்த சிறுமியை அவர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். இந்நிலையில், நள்ளிரவு 1 மணியளவில் சிறுமியின் உடல் கட்டிடத்தின் அடித்தளத்தில் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அந்த சிறுமியின் தலையில் பலத்த காயங்கள் உள்ளதாகவும், உடலில் பல இடங்களில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி, அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தலையில் ஏற்பட்ட காயம் காரணமாகவே சிறுமி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் கொலை, பாலியல் வன்கொடுமை, போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தேகத்தின் அடிப்படையில் 5 பேரைப் பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com