

பெங்களூரு,
பெங்களூருவில் சாலை விபத்துகளை கட்டுப்படுத்தவும், போக்குவரத்து விதிமீறல்களை தடுக்கவும் பெங்களூரு போக்கு வரத்து போலீசார் சார்பில் சிறப்பு சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த சோதனையில் கடந்த 16-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை, 7 நாட்களுக்கு நகரின் அனைத்து போக்குவரத்து போலீஸ் நிலைய எல்லைகளிலும் வாகன சோதனை நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 42 ஆயிரத்து 68 வாகன ஓட்டிகளிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையில், 744 பேர் குடிபோதையில் வாகனம் ஒட்டியது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சாலைகளில் அதிவேகமாக சென்ற 239 வாகன டிரைவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு சோதனை தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்த போலீசார், யாரும் மதுபோதையில் வாகனம் ஓட்ட கூடாது என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.