

மும்பை,
இங்கிலாந்தில் புதியவகை கொரோனா வைரஸ் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உருமாறிய இந்த நோய் தொற்று, சாதாரண கொரோனாவை விட 70 சதவீதம் வேகமாக பரவி வருகிறது. அதனால், 31-ந் தேதி வரை இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களை கண்காணிக்கவும், கடந்த திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமைகளில் இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தவும் மத்திய அரசின் வழிகாட்டுதலின் பேரில் மராட்டிய அரசு உத்தரவிட்டது.
அந்த வகையில் மேற்கண்ட 2 நாட்களில் இங்கிலாந்தில் இருந்து 1,688 பயணிகள் மும்பை வந்து இறங்கியுள்ளனர். அவர்களில் 745 பேர் மும்பையில் உள்ள ஓட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டனர். வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த மற்றவர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் 7 நாட்கள் சொந்த செலவில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
7-வது நாளில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும். அதில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் ஆஸ்பத்திரி அல்லது ஓட்டல்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுவார்கள். நோய் தொற்று இல்லாதவர்கள் வீடுகளில் அடுத்த 7 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என அரசு தெரிவித்து உள்ளது.