நாடாளுமன்றத்தில் விவாதங்களின் தரம் குறைந்து வருகிறது: மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா

நாடாளுமன்றத்தில் விவாதங்களின் தரம் குறைந்து வருகிறது என்று மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் விவாதங்களின் தரம் குறைந்து வருகிறது: மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா
Published on

ஓம்பிர்லா பேட்டி

நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, கர்நாடக சட்டசபையின் கூட்டுக்கூட்டத்தில் பங்கேற்க நேற்று பெங்களூருவுக்கு வந்தார். பின்னர் அவர், கர்நாடக சட்டசபை கூட்டத்தில் பங்கேற்று சட்டசபையின் மாண்புகள் குறித்த நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

இந்த நிலையில் அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பிரச்சினைகளுக்கு தீர்வு

சட்டசபை கூட்டங்களில் உறுப்பினர்கள் சிலர் ஒழுங்கீனமாக நடந்து கொள்கிறார்கள். இது கவலை அளிப்பதாக உள்ளது. சபையில் ஒழுக்கத்தை நிலைநாட்ட அனைவரும் சேர்ந்து பாடுபட வேண்டியது அவசியம். முதல்-மந்திரி, எதிர்க்கட்சி தலைவர் என அனைவரும் சேர்ந்து, சட்டசபையின் பொறுப்புகள் என்ன என்பது குறித்து தங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு எடுத்து கூற வேண்டும்.பொறுப்பில் இருப்பவர்கள் இதற்காக உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்கு சரியான செய்தியை சொல்ல வேண்டும் என்றால் அவர்களுக்காக நல்ல திட்டங்களை செயல்படுத்த வேண்டும். உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் இந்த விஷயத்தில் உரிய கவனம் செலுத்த வேண்டியது அவசியம். நாடாளுமன்றம், சட்டசபைகள் சுமுகமாக நடைபெற்றால் தான் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

ஒழுங்கை மீறக்கூடாது

சபை நடைபெறுவது பாதை தவறினால் அதற்கு அனைத்துக்கட்சிகளும் பொறுப்பு ஏற்க வேண்டும். நாடாளுமன்றத்தில் விவாதங்களின் தரம் குறைந்து வருகிறது. இது சட்டசபைகளிலும் இருக்கிறது. இதில் சீர்திருத்தம் செய்ய அனைவரும் சேர்ந்து முயற்சி செய்ய வேண்டும். இதற்காக ஒவ்வொருவரும் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தனிப்பட்ட விஷயங்களுக்காக சபை நேரம் வீணாவதை அனுமதிக்க கூடாது.

சபாநாயகர் குறித்து தரக்குறைவாக பேசுவது யாருக்கும் நல்லதல்ல. கொரோனா காலத்தில் நாடாளுமன்றத்தை நடத்துவது கஷ்டமாக இருந்தது. அத்தகைய சூழலிலும் நாங்கள் நாடாளுமன்ற கூட்டத்தை சிறப்பான முறையில் நடத்தினோம். சபையில் விவாதம் நடத்துவது, குரலை உயர்த்தி பேசுவது போன்றவை இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் தான் நல்ல முடிவுகளை எடுக்க முடியும். ஆனால் உறுப்பினர்கள் ஒழுங்கை மீறக்கூடாது.

மக்கள் பிரதிநிதிகள்

ஜனநாயகத்தை காப்பதில் மக்கள் பிரதிநிதிகளின் பங்கு முக்கியமானது. மக்கள் பிரதிநிதிகள், மக்களின் விருப்பங்கள் என்ன என்பதை புரிந்து கொண்டு அதற்கு தக்கபடி பணியாற்ற வேண்டும். மக்களின் பிரச்சினைகள் என்ன என்பது மக்கள் பிரதிநிதிகளுக்கு தெரிந்திருக்க வேண்டும். அப்போது தான் ஜனநாயகத்திற்கு மதிப்பு இருக்கும். கிராம பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரை மக்களின் குரல் கேட்க வேண்டும். ஊடகங்கள் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை பாதுகாக்க வேண்டும்.தேசிய கல்வி கொள்கை தொடர்பாக மத்திய அரசு ஒரு சட்டத்தை இயற்ற உள்ளது. அதன் மீது விவாதங்கள் நடந்த பிறகு அந்த சட்டம் நிறைவேற்றப்படும். இந்த கல்வி கொள்கைக்கு கர்நாடகத்தில் சிலர் ஆட்சேபனைகளை எழுப்பி இருக்கலாம். ஆனால், அனைவரின் கருத்துகளுக்கும் அரசு உரிய மதிப்பை அளிக்கும். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிறது. பொது கணக்கு குழு தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆகிறது. அதனால் வருகிற டிசம்பர் மாதம் 4, 5-ந் தேதி நூற்றாண்டு விழா நடத்தப்படும்.

இவ்வாறு ஓம்பிர்லா கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com