75 டன் எடையுள்ள செயற்கைக்கோள்... 40 மாடி உயர ராக்கெட் - இஸ்ரோ தலைவர் பகிர்ந்த தகவல்

75 டன் எடையுள்ள செயற்கைக்கோளை விண்வெளியில் நிலைநிறுத்த 40 மாடி உயரம் கொண்ட ராக்கெட்டை உருவாக்கி வருவதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார்.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ தலைவர் நாராயணன் கலந்துகொண்டார். இந்த விழாவில் நாராயணன் உரையாற்றியதாவது;
நடப்பாண்டில் இந்திய ராக்கெட்டுகளைப் பயன்படுத்தி அமெரிக்காவின் 6,500 கிலோ எடையுள்ள தகவல் தொடர்பு செயற்கைக்கோள் விண்வெளியில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. அத்துடன், NAVIC (இந்திய விண்மீன் அமைப்புடன் வழிசெலுத்தல்) செயற்கைக்கோள் மற்றும் என்1 ராக்கெட் போன்ற திட்டங்களை இஸ்ரோ செயல்படுத்த உள்ளது.
"உங்களுக்குத் தெரியுமா, ராக்கெட்டின் கொள்ளளவு என்ன? (டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் உருவாக்கிய முதல் ராக்கெட்17 டன் எடை கொண்டது. இது 35 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை தாழ்வான பூமி சுற்றுப்பாதையில் செலுத்தும் திறன் கொண்டது. இன்று, 75,000 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை தாழ்வான பூமி சுற்றுப்பாதையில் செலுத்தும் ராக்கெட்டை நாங்கள் உருவாக்கி வருகிறோம். இந்த ராக்கெட் 40 மாடி கட்டிட உயரம் கொண்டது.
இந்த ஆண்டு தொழில்நுட்ப செயல்விளக்க செயற்கைக்கோள் (TDS) மற்றும் இந்திய இராணுவ தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட்-7ஆர் (GSAT-7R) ஆகியவற்றை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இது தற்போதுள்ள ஜிசாட்-7 (ருக்மிணி) செயற்கைக்கோளுக்கு மாற்றாக, இந்திய கடற்படைக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்தியாவின் 55 செயற்கைக்கோள்கள் சுற்றுப்பாதையில் உள்ளன. இந்த எண்ணிக்கை இன்னும் மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் மூன்று மடங்காக அதிகரிக்கப்படும்.”
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவின்போது, இந்திய விண்வெளித் திட்டத்திற்கு ஆற்றிய முக்கிய பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில், இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு தெலுங்கானா கவர்னர் ஜிஷ்ணு தேவ் வர்மா, கௌரவ அறிவியல் முனைவர் பட்டம் வழங்கினார்.






