ஒரே நாளில் 78,500 பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் விருப்ப ஓய்வு

ஒரே நாளில் 78 ஆயிரத்து 500 பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற்றனர். அவர்களுக்கு ரூ.70 ஆயிரம் கோடி பணப்பலன்கள் கிடைக்கும்.
ஒரே நாளில் 78,500 பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் விருப்ப ஓய்வு
Published on

புதுடெல்லி,

பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்., கடுமையான நஷ்டத்தில் இயங்கி வருகிறது. பொருளாதார சிக்கலில் இருந்து விடுபடுவதற்கு ஒரு வழிமுறையாக, ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு (வி.ஆர்.எஸ்.) திட்டத்தை பி.எஸ்.என்.எல். அறிவித்தது.

50 வயதை தாண்டிய எந்த ஊழியரும் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்தது. அதை ஏற்று, சுமார் 78 ஆயிரத்து 500 ஊழியர்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தனர். பி.எஸ்.என்.எல். நிர்வாகம் அதற்கு ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில், 78 ஆயிரத்து 500 பேரும் நேற்று விருப்ப ஓய்வில் சென்றனர். இதனால், பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் எண்ணிக்கை பாதிக்கு பாதி குறைந்துள்ளது.

இவர்களுடன் 6 ஆயிரம் ஊழியர்கள் பணிக்காலம் முடிந்து ஓய்வு பெற்றுள்ளனர்.

ஊழியர்களுக்கான சம்பள செலவாக பி.எஸ்.என்.எல்.லுக்கு ஆண்டுக்கு ரூ.2 ஆயிரத்து 272 கோடி செலவாகி வந்தது. இந்த செலவு, இனிமேல் ரூ.500 கோடியாக குறையும்.

விருப்ப ஓய்வில் சென்றவர்களுக்கு 40 மாத மொத்த சம்பளத்தில் 125 சதவீதம் கணக்கிடப்பட்டு, இழப்பீடாக வழங்கப்படும். இதற்காக ரூ.70 ஆயிரம் கோடிக்கு மேல் அளிக்கப்படுகிறது.

ஓய்வூதியர்களுக்கான பணிக்கொடையாக ரூ.17 ஆயிரத்து 169 கோடி ஒதுக்கப்படும். ஓய்வூதியத்துக்கு ரூ.12 ஆயிரத்து 678 கோடி வழங்கப்படும்.

தகுதியான ஊழியருக்கு அவர் பணி முடித்த ஒவ்வொரு ஆண்டுக்கும் 35 நாள் சம்பளத்துக்கு சமமான தொகையும், மீதம் இருக்கும் பணிக்காலத்துக்கு ஆண்டொன்றுக்கு 25 நாள் சம்பளத்துக்கு சமமான தொகையும் கணக்கிடப்பட்டு, பணிக்கொடையாக வழங்கப்படும் என்று பி.எஸ்.என்.எல். வட்டாரங்கள் தெரிவித்தன.

விருப்ப ஓய்வுக்கு பிறகு, தற்போது பி.எஸ்.என்.எல்.லில் சுமார் 85 ஆயிரம் ஊழியர்கள் இருப்பதாக தெரிகிறது. பெருமளவிலான என்ஜினீயர்கள் விருப்ப ஓய்வு பெற்றுவிட்டபோதிலும், சேவையின் தரம் பாதிக்கப்படாது என்று பி.எஸ்.என்.எல். கூறுகிறது.

மற்றொரு பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான எம்.டி.என்.எல். ஊழியர்களில் 14 ஆயிரத்து 378 பேர் நேற்று விருப்ப ஓய்வு பெற்றனர். மீதி 4 ஆயிரத்து 430 ஊழியர்களுடன் எம்.டி.என்.எல். இயங்க உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com