ராஜஸ்தான்: பனாஸ் நதியில் மூழ்கி 8 இளைஞர்கள் உயிரிழப்பு

நண்பரின் பிறந்தநாளைக் கொண்டாட வந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பரத்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டத்தில் உள்ள பனாஸ் ஆற்றில் ஜெய்ப்பூரைச் சேர்ந்த 8 இளைஞர்கள் மூழ்கி இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் மேலும் 3 பேர் மீட்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

25 முதல் 32 வயதுக்குட்பட்டவர்கள் என்று நம்பப்படும் 11 பேர் கொண்ட குழு, ஒரு நண்பரின் பிறந்தநாளைக் கொண்டாட டோங்கிற்கு வந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சிலர் நீந்துவதற்காக ஆற்றில் இறங்கினர். அப்போது தீடீரன நீரில் மூழ்கத் தொடங்கியபோது மற்ற நண்பர்கள் அவர்களுக்கு உதவ முயன்றதாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து அவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து உள்ளூர்வாசிகள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து கூட்டு மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக பேசிய டோங்க் காவல் கண்காணிப்பாளர் விகாஸ் சங்வான், "இளைஞர்கள் நீரில் மூழ்கிய சம்பவத்தில் 8 பேர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இறந்தவர்கள் ஹசன்புராவைச் சேர்ந்த நவுஷாத் கான், ருசிம் கான் மற்றும் பர்ஹான் கான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அனைவரும் காட் கேட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன. அவர்களின் குடும்பத்தினருக்கும் ஜெய்ப்பூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பிரேத பரிசோதனைக்குப் பிறகு உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும்" என்று கூறினார்.

மேலும் உள்ளூர்வாசிகள் மற்றும் போலீசாரின் உதவியுடன் 3 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com