நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்கள் அறிமுகம்


நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்கள் அறிமுகம்
x

நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப தயாராகி வருகின்றன.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 21-ந் தேதி தொடங்குகிறது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 21-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை உள்ளிட்டவை குறித்த எதிர்க்கட்சிகளின் சந்தேகங்கள் பெரிய அளவில் எதிரொலிக்கும் என்று தெரிகிறது.

மேலும் இந்த தொடரில் மொத்தம் 21 அமர்வுகளுக்கு திட்டமிடப்பட்டு உள்ளது. ரக்ஷா பந்தன் மற்றும் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக இடையில் ஆகஸ்டு 12 முதல் 18-ந் தேதி வரை நாடாளுமன்ற தொடருக்கு இடைவெளி விடப்படுகிறது.

பரபரப்பான சூழலில் நடைபெற உள்ள இந்த தொடரில் பல்வேறு முக்கியமான சட்ட அலுவல்களை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. குறிப்பாக 8 புதிய மசோதாக்களை இந்த தொடரில் அறிமுகம் செய்ய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அந்தவகையில் தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா, புவிசார் பாரம்பரிய தளங்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் (பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) மசோதா, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா, தேசிய ஊக்கமருந்து தடுப்பு (திருத்தம்) மசோதா ஆகிய மசோதாக்களை தாக்கல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் மணிப்பூர் சரக்கு மற்றும் சேவைகள் வரி (திருத்தம்) மசோதா, ஜன விஸ்வாஸ் (விதிகளில் திருத்தம்) மசோதா, ஐ.ஐ.எம் (திருத்தம்) மசோதா மற்றும் வரி விதிப்புச்சட்டங்கள் (திருத்தம்) மசோதா போன்ற மசோதாக்களும் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது. இவற்றை தவிர கடந்த பட்ஜெட் தொடரில் தாக்கல் செய்யப்பட்டு நாடாளுமன்ற தேர்வுக்குழுவின் பரிசீலனையில் இருக்கும் புதிய வருமான வரி மசோதாவும் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை நீட்டிப்பதற்கான நாடாளுமன்ற ஒப்புதலை பெறவும், மாநிலத்துக்கான மானியக்கோரிக்கைகளுக்கு ஒப்புதல் பெறவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறு ஏராளமான சட்ட நடவடிக்கைகளுக்கு அரசு தயாராகி வரும் நிலையில், எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத்தில் பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப தயாராகி வருகின்றன.

குறிப்பாக ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அதை நிறுத்தியதற்கான உரிமைகோரும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் அறிவிப்பு, பீகாரில் தேர்தல் கமிஷன் நடத்தி வரும் சிறப்பு வாக்காளர் திருத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளில் மத்திய அரசின் பதில் கேட்டு போர்க்கொடி தூக்க முடிவு செய்துள்ளன.

இதனால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் புயலுக்கு பஞ்சமிருக்காது என தெரிகிறது.

1 More update

Next Story