

பயந்தர்,
தானே மாவட்டம், பயந்தரை சேர்ந்தவர் சஞ்சய் குப்தா. காவலாளியான இவர் கடந்த மார்ச் 3-ந்தேதி நவ்கர் போலீசில் புகார் ஒன்று அளித்தார். இந்தப்புகாரில் தனது பாதுகாப்பில் இருந்த 14 வயது சிறுமி, ஹோலி பண்டிகைக்காக பொருட்கள் வாங்க கடைக்கு சென்றபோது மாயமானதாக தெரிவித்து இருந்தார். இந்தப்புகாரின் பேரில் போலீசார் மாயமான சிறுமியை தேடி வந்தனர்.
பின்னர், பயந்தர் பகுதியில் நடமாடிய சிறுமியை அடையாளம் கண்டு மீட்டனர். இதுபற்றி சிறுமியிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. மாயமான சிறுமி அரியானா மாநிலம், அம்பாலா பகுதியை சேர்ந்தவள் என தெரியவந்தது. பள்ளியில் சேர்த்து விடுவதாகவும், பாதுகாப்பு வழங்குவதாகவும் உறவினர்களிடம் கூறி காவலாளி சஞ்சய் குப்தா சிறுமியை மும்பை அழைத்து வந்துள்ளார்.
இதன் பின்னர் சிறுமியை பள்ளிக்கு அனுப்பாமல் அங்குள்ள விபசார கும்பலிடம் ரூ.50 ஆயிரத்திற்கு விற்றது தெரியவந்தது. இதனால் சிறுமி விபசார கும்பலிடம் சிக்கி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானாள். இதனையடுத்து அந்த கும்பலிடம் இருந்து தப்பித்து வெளியேறி உள்ளாள்.
சிறுமி அளித்த தகவல்களின் பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவலாளி சஞ்சய் குப்தா மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 2 பெண்கள் உள்பட மொத்தம் 8 பேரை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியை காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.