இந்திய கடற்படைக்கு ரூ.40,000 கோடியில் 8 அதிநவீன போர்க்கப்பல்கள்

முதல் போர்க்கப்பல் வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் இந்தியக் கடற்படையில் முறைப்படி சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கடற்படைக்கு ரூ.40,000 கோடியில் 8 அதிநவீன போர்க்கப்பல்கள்
போர்க்கப்பல்கள்
Published on: 

புதுடெல்லி,

இந்திய கடற்படையை உலக தரத்திற்கு உயர்த்தும் வகையில், ரூ.40,000 கோடிக்கும் அதிகமான மதிப்பில் 8 அதிநவீன 'அடுத்த தலைமுறை போர்க்கப்பல்களை' வாங்குவதற்குப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

முற்றிலும் இந்தியாவில் தயாரிப்பு

'ஆத்மநிர்பார் பாரத்' (சுயசார்பு இந்தியா) திட்டத்தின் கீழ், இந்த போர்க்கப்பல்கள் முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்படவுள்ளன. இதற்கான கட்டுமான பணிகளை இந்தியாவின் முன்னணி பொதுத்துறை நிறுவனங்களான கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் ஷிப்பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் லிமிடெட் மற்றும் கோவா கப்பல் கட்டும் தளம் ஆகியவை மேற்கொள்ளவுள்ளன.

கப்பல்களின் மிரட்டலான சிறப்பம்சங்கள்

• எடை: தலா 2,000 டன் எடையில் பிரம்மாண்டமாக உருவாகிறது.

• வேகம்: கடலில் மணிக்கு 30 நாட்ஸ் (சுமார் 56 கி.மீ) வேகத்தில் சீறிப்பாயும் திறன் கொண்டது.

• பயன்பாடு: கடல்சார் கண்காணிப்பு, கடற்கரை பாதுகாப்பு மற்றும் எதிரிகளின் இலக்குகளை துல்லியமாக தாக்கும் நவீன வசதிகள் இதில் இடம்பெறவுள்ளன.

2030-க்குள் முதல் கப்பல்

கடல் எல்லையில் சீன மற்றும் பாகிஸ்தானின் ஊடுருவல்களை தடுப்பதில் இந்த கப்பல்கள் மிக முக்கிய பங்காற்றவுள்ளன. இந்த பிரம்மாண்ட திட்டத்தின் முதல் போர்க்கப்பல் வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் இந்தியக் கடற்படையில் முறைப்படி சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் கடல் எல்லை பாதுகாப்பை உச்சத்திற்கு கொண்டு செல்லும் இந்த நடவடிக்கை, உள்நாட்டு பாதுகாப்பு தயாரிப்பில் ஒரு சிறப்புமிக்க மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

X