உத்தர பிரதேசத்தில் 80 சதவீதம் பேர் பாஜகவுக்கு ஆதரவு: யோகி ஆதித்யநாத் கணிப்பு

சமாஜ்வாடி கட்சியும் காங்கிரசும் கூட்டணியில் எந்தக் கட்சி பெரியது என்பதைக் காட்டுவதற்கான போட்டியில் ஈடுபட்டுள்ளன என்று யோகி ஆதித்யநாத் விமர்சித்தார்.
யோகி ஆதித்யநாத்
Published on: 

லக்னோ:

உத்தரபிரதேசத்தில் 80 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக இருப்பதாக அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், 2027-ம் ஆண்டு உத்தரபிரதேச சட்டசபை தேர்தலை முன்னிட்டு சமாஜ்வாடி கட்சி மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக நிலவி வரும் கருத்து வேறுபாடுகளை விமர்சித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

சமாஜ்வாடி கட்சியும் காங்கிரசும் கூட்டணியில் எந்தக் கட்சி பெரியது என்பதைக் காட்டுவதற்கான போட்டியில் ஈடுபட்டுள்ளன. தொகுதிப் பங்கீடு தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. இந்தக் கூட்டணி விரைவில் சிதறிவிடும்.சமாஜ்வாடி கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் வெறும் பொய்யான வாக்குறுதிகளாக உள்ளன. வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.5,000 உதவித்தொகை, 25 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். இதற்கான நிதியை எங்கிருந்து திரட்டுவார்கள் என்பதை விளக்க வேண்டும்.

உத்தரபிரதேசத்தில் வளர்ச்சி, பாரம்பரியத்திற்கு மரியாதை, பாதுகாப்பான சூழல் ஆகியவற்றை விரும்பும் மக்கள் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக உள்ளனர். மாநிலத்தில் 80 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் பாஜகவுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். மீதமுள்ள 20 சதவீதம் பேர் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் அல்லது வேறு யாருக்கு வேண்டுமானாலும் ஆதரவு அளிக்கலாம். இவ்வாறு யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்

X