

பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு (ராமநகர்) மாவட்டம் சென்னபட்டனா தாலுகா பி.வி.ஹள்ளி கிராமத்தை சேர்ந்த மூதாட்டி பர்வதம்மா (80 வயது). இவர் விலங்குகளுக்கு உணவு அளிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அவரது வீட்டுக்கு தினமும் குரங்கு ஒன்று வந்துள்ளது. இதனை பார்த்த மூதாட்டி அந்த குரங்குக்கு உணவு கொடுத்து வந்துள்ளார்.
பின்னர் அந்த குரங்கு தினமும் மூதாட்டியை பார்க்க வந்து அவரிடம் உணவு சாப்பிட்டுவிட்டு, விளையாடி விட்டு மாலையில்தான் வனப்பகுதிக்கு செல்லும். இந்த நிலையில் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக மூதாட்டி பர்வதம்மா நேற்று உயிரிழந்தார்.
வழக்கம்போல மூதாட்டியை பார்க்க வந்த குரங்கு அவர் இறந்ததை கண்டு சோகமடைந்தது. தொடர்ந்து மூதாட்டியின் உடலை கட்டி தழுவி அவருக்கு தனது இறுதி அஞ்சலியை செலுத்தியது. இந்த நிகழ்வு மூதாட்டியின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பர்வதம்மாவின் உடலை அடக்கம் செய்ய எடுத்துச் செல்லும் வரை அந்தக் குரங்கு அங்கேயே இருந்துள்ளது. பின்னர், அதை பிடித்து வேறு இடத்தில் பத்திரமாக விட்டுவிட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.