187 பணியிடங்களுக்கு 8 ஆயிரம் பேர் போட்டி; ஒடிசாவில் விமான ஓடுதளத்தில் நடந்த தேர்வு

ஒடிசாவில் விமான ஓடுதளம் தேர்வு அறையாக பயன்படுத்தப்பட்ட சம்பவம் பேசுபொருளாகி உள்ளது.
புவனேஸ்வர்,
ஒடிசா மாநிலத்தில் ஊர்க்காவல் படையில் உள்ள 187 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. இந்த பணிக்கான குறைந்தபட்ச தகுதியாக 5-ம் வகுப்பு தேர்ச்சி என்பதே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தேர்வுக்கு ஏராளமான இளநிலை, முதுநிலை பட்டதாரிகள் விண்ணப்பம் செய்திருந்தனர்.
இந்த நிலையில், கடந்த 16-ந்தேதி ஒடிசாவின் சம்பல்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்வில் சுமார் 8 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் தேர்வு அறைக்கு பதிலாக, சமர்தர்பல்லி விமான ஓடுதளத்தில் வரிசையாக அமரவைக்கப்பட்டனர். பின்னர் தரையில் அமர்ந்தபடியே அனைவரும் தேர்வை எழுதி முடித்தனர்.
வெட்ட வெளியில் விமான ஓடுதளத்தில் தேர்வர்கள் தேர்வு எழுதிய சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளது. அதே சமயம், 5-ம் வகுப்பு தேர்ச்சியை தகுதியாக கொண்ட பணிக்கு, ஆயிரக்கணக்கான பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பித்திருப்பது வேலையின்மையின் தீவிரத்தை எடுத்துக்காட்டுவதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.






