இந்தியா முழுவதும் இதுவரை 8,001 மக்கள் மருந்தகங்கள் திறப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

இந்தியா முழுவதும் இதுவரை 8,001 மக்கள் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் இதுவரை 8,001 மக்கள் மருந்தகங்கள் திறப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்
Published on

புதுடெல்லி,

மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் இந்தியா முழுவதும் இதுவரை திறக்கப்பட்டுள்ள மக்கள் மருந்தகங்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். அந்த பதிலில் அவர் கூறியிருப்பதாவது;-

பிரதமரின் பாரதிய ஜனவ்ஷாதி பரியாஜனா திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த 2 ஆம் தேதி வரை 8,001 மக்கள் மருந்தகங்களை மத்திய அரசு திறந்துள்ளது. மேலும் நாடு முழுவதும் 2025, மார்ச் மாதத்துக்குள் 10,500 மக்கள் மருந்தகங்களை திறக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் சிறந்த உற்பத்தி நடைமுறைகளுக்கான சான்றளிக்கப்பட்ட உள்நாட்டு மருந்து உற்பத்தி நிறுவனங்களிலிருந்து ஜனவ்ஷாதி மையங்களுக்கான மருந்துகள் வாங்கப்படுகின்றன. இந்த மருந்துகள் அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில் சோதிக்கப்படுகின்றன. பின்னர் குருகிராம், சென்னை மற்றும் கவுகாத்தியில் உள்ள கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து நாடு முழுவதும் உள்ள விற்பனையாளர்களுக்கு இவை அனுப்பப்படுகின்றன.

அரசு மருத்துவமனை வளாகங்களில், கடந்த 2 ஆம் தேதி வரை 1,012 மக்கள் மருந்தகங்கள் செயல்படுகின்றன. மக்கள் மருந்தக கடை உரிமையாளர்களுக்கான ஊக்கத் தொகையை ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக மத்திய அரசு சமீபத்தில் அதிகரித்துள்ளது.

இவ்வாறு மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com