

புதுடெல்லி
பி.எப். சந்தாதாரர்கள் 34 கோடி பேருக்கு வருகிற 15-ந்தேதிக்குள் 8.25 சதவீத வட்டி தொகை வந்து சேரும் என மத்திய மந்திரி அறிவித்து உள்ளார்.
புதுடெல்லியில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (இ.பி.எப்.ஓ.) உயர்நிலை குழு கூட்டம் நடந்தது. இதில் பி.எப். சேமிப்புக்கான வட்டியை 8.25 சதவீதம் வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவு மத்திய நிதியமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.
இதில், பி.எப் சேமிப்புக்கான வட்டியை 8.25 சதவீதம் அளிக்க மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இதனால், 34 கோடி சந்தாதாரர்கள் பயன் பெறுவார்கள்.
இதன்படி பி.எப். கணக்கில், ரூ.1 லட்சம் இருந்தால் ரூ.8,250 வரவு வைக்கப்படும். ரூ.2 லட்சம் இருந்தால் ரூ.16,500, ரூ.5 லட்சம் இருந்தால் ரூ.41,250 வரவு வைக்கப்படும் என கூறப்படுகிறது.
இந்த வட்டியானது, உங்கள் பி.எப். கணக்கில் வரவு வைக்கப்பட்ட மொத்த தொகைக்கு, ஆண்டு அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரியில் பி.எப். வட்டி 8.15 சதவீதத்தில் இருந்து 8.25 சதவீதமாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த பி.எப். தொகைக்கான வட்டி வரவு பற்றி மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை மந்திரி டாக்டர் மன்சுக் மாண்டவியா அளித்த பேட்டியின்போது, புதிய மத்திய தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நடைமுறையால், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எப்.) சந்தாதாரர்களுக்கு ரூ.1.44 லட்சம் கோடி நிதி, வருகிற 15-ந்தேதிக்குள் வரவு வைக்கப்படும் என்றார்.
இதற்கேற்ற வகையில், உறுப்பினர்களின் பதிவுகள் அனைத்தும் புதிய தரவு தளத்திற்கு மாற்றும் நடைமுறையும் முழுமையடைந்து உள்ளது. இதன்படி, ஒருங்கிணைந்த உறுப்பினர் வலைதளத்திற்கு எளிதில் உறுப்பினர்கள் செல்லவும், அதில், உறுப்பினர் அந்தஸ்துக்கான விவரங்கள், பி.எப். கையிருப்புகள், பிற பலன்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை எளிதில் பார்வையிட முடியும்.