துணை ராணுவத்தில் 84 ஆயிரம் காலி பணியிடங்கள்; நாடாளுமன்றத்தில் தகவல்

துணை ராணுவ காலி பணியிடங்களில் முன்னாள் அக்னிவீரர்களுக்கு 10 சதவீதம் ஒதுக்கீடு அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.
துணை ராணுவத்தில் 84 ஆயிரம் காலி பணியிடங்கள்; நாடாளுமன்றத்தில் தகவல்
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற மேலவையில் தமிழக எம்.பி. சண்முகம் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு மத்திய உள்விவகார துணை இணை மந்திரி நித்தியானந்த ராய் எழுத்துப்பூர்வ பதிலை அளித்துள்ளார்.

அதில், நடப்பு ஆண்டு ஜூலை 1-ந்தேதியின்படி, மத்திய ஆயுத போலீஸ் படை மற்றும் அசாம் ரைபிள் படையில் மொத்தம் 84,106 காலி பணியிடங்கள் உள்ளன. மொத்தமுள்ள 10 லட்சத்து 45 ஆயிரத்து 751 பணியிடங்களில் காலியாக உள்ள இடங்கள் தொடர்ச்சியான முறையில் நிரப்பப்படும் என்றார்.

மத்திய பணியாளர் தேர்வாணையம், எஸ்.எஸ்.சி. உள்ளிட்டவற்றின் வழியே இந்த பணியிடங்களை விரைவாக நிரப்பும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றார். 2023-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2024-ம் ஆண்டு பிப்ரவரி வரையில் 67,345 பேர் பணியமர்த்தப்பட்டு உள்ளனர் என அவர் தெரிவித்து உள்ளார்.

முன்னாள் அக்னிவீரர்களுக்கு காலி பணியிடங்களில் 10 சதவீதம் ஒதுக்கீடு அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, கான்ஸ்டபிள்(பொது பணி) மற்றும் ரைபிள்மேன் பதவிகளில் அவர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.

இதேபோன்று, அதிகபட்ச வயது வரம்பில் இருந்து தளர்வு அளிக்கவும் மற்றும் உடல்தகுதி தேர்வில் இருந்து விலக்களிக்கவும் தற்காலிக பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com