

புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் கடந்த ஜனவரி 16ந்தேதி தொடங்கி நடந்து வருகின்றன. இதன்பின்பு கடந்த மே 1ந்தேதியில் இருந்து 18 வயது அடைந்த அனைவருக்கும் தடுப்பூசி போட்டு கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது.
இந்த நிலையில், நாட்டில் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 69 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் 30 லட்சத்து 39 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருந்தது. இதனை முன்னிட்டு, நாட்டில் இன்று தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை மகிழ்ச்சி அளிக்கிறது என பிரதமர் மோடி டுவிட்டரில் நேற்று பதிவிட்டார்.
இந்த நிலையில் நேற்று 8.30 மணி நிலவரப்படி 80 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு இருந்தது. நேற்று முன்தினத்துடன் ஒப்பிடும்போது, இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு முன்பாக கடந்த ஏப்ரல் 2ந்தேதி 42 லட்சத்து 65 ஆயிரத்து 157 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதே அதிகபட்ச அளவாக இருந்தது.
இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 86 லட்சத்து 16 ஆயிரத்து 373 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன. இது உலகம் முழுவதும் இதுவரை போடப்பட்ட ஒரு நாள் கொரோனா தடுப்பூசி எண்ணிக்கையில் மிக அதிகம் ஆகும் என்று தெரிவித்து உள்ளது.