குஜராத்: 10-ம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்தி கொன்ற 8-ம் வகுப்பு மாணவன்; பள்ளி சூறையாடல்


குஜராத்:  10-ம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்தி கொன்ற 8-ம் வகுப்பு மாணவன்; பள்ளி சூறையாடல்
x
தினத்தந்தி 20 Aug 2025 4:06 PM IST (Updated: 20 Aug 2025 4:23 PM IST)
t-max-icont-min-icon

அந்த மாணவன் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்து விட்டான்.

ஆமதாபாத்,

குஜராத்தின் ஆமதாபாத் நகரில் கோகரா பகுதியில் செவன்த் டே அட்வென்டிஸ்ட் பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், படித்து வரும் 8-ம் வகுப்பு மாணவனுக்கு, அதே பள்ளியில் படித்து வந்த 10-ம் வகுப்பு மாணவனுடன் மோதல் போக்கு இருந்து வந்தது.

இந்நிலையில், அவர்கள் இருவருக்கும் இடையே பள்ளிக்கு வெளியே நேற்று மாலை சிறிய அளவில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரத்தில், திடீரென மூத்த மாணவனை 8-ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்தி கடுமையாக தாக்கியுள்ளான். வேறு 8 முதல் 10 பேரும் தாக்குதலில் ஈடுபட்டனர் என கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் அந்த 10-ம் வகுப்பு மாணவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அந்த மாணவனை மீட்டு, மணிநகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

எனினும், இதில் பலனின்றி அந்த மாணவன் நேற்றிரவு உயிரிழந்து விட்டான். இதனை தொடர்ந்து பள்ளிக்கூடத்திற்கு வெளியே சிந்தி சமூகத்தினர் திரளாக கூடி விட்டனர். அவர்கள் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து, நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பள்ளி பஸ்கள், கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை சூறையாடினர்.

பள்ளி ஊழியர் ஒருவரின் சட்டை காலரை பிடித்து தரதரவென படியின் வழியே இழுத்து சென்றனர். பள்ளி முதல்வர் மற்றும் பிற பணியாளர்களும் கடுமையாக தாக்கப்பட்டனர். பள்ளியின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் உடைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீஸ் படை வரவழைக்கப்பட்டது. இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story