சட்டவிரோதமாக தங்குவோருக்கு ஆதார் கார்டு வாங்கி கொடுத்த வங்காளதேசத்தினர் உள்பட 9 பேர் கைது

சட்டவிரோதமாக தங்கி இருக்கும் வெளிநாட்டினருக்கு ஆதார் கார்டு வாங்கி கொடுத்த வழக்கில் வங்காளதேச நாட்டை சேர்ந்தவர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து போலி முத்திரைகள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக தங்குவோருக்கு ஆதார் கார்டு வாங்கி கொடுத்த வங்காளதேசத்தினர் உள்பட 9 பேர் கைது
Published on

பெங்களூரு: சட்டவிரோதமாக தங்கி இருக்கும் வெளிநாட்டினருக்கு ஆதார் கார்டு வாங்கி கொடுத்த வழக்கில் வங்காளதேச நாட்டை சேர்ந்தவர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து போலி முத்திரைகள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக இந்தியாவுக்கு...

பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா மாதநாயக்கனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சிக்ககொல்லரஹட்டியில் ஒரு வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. அந்த ஏ.டி.எம்.மையத்தை உடைத்து கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி ரூ.18 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருந்தனர். இதுகுறித்து மாதநாயக்கனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையாகளை தேடிவந்தனர்.

போலீஸ் விசாரணையில், இந்த கொள்ளையில் வங்காளதேசத்தை சேர்ந்தவர்களும், அவர்களுடன் சேர்ந்து உள்ளூர்வாசிகளும் ஈடுபட்டு இருக்கலாம் என்று கருதினார்கள். அந்த கோணத்தில் விசாரணை நடத்திய போலீசார், பெங்களூருவில் வசித்து வந்த வங்காளதேசத்தை சேர்ந்த சேக் இஸ்மாயில் என்பவரை பிடித்து விசாரித்தனர்.

வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் கைது

அவர் திரிபுரா மாநில எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து, பெங்களூருவுக்கு வந்து சட்டவிரோதமாக தங்கி இருந்தது தெரியவந்தது. அத்துடன் அவரிடம் ஆதார் கார்டு இருப்பதும் தெரிந்தது. மேலும் வங்காளதேசத்தை சேர்ந்த ஷியாதுல் அகோன் என்பவரும், சட்டவிரோதமாக பெங்களூருவில் தங்கி இருப்பதுடன், ஆதார் கார்டு பெற்று சொந்தமாக பிளாஸ்டிக் தொழிற்சாலையை நடத்தி வருவதாகவும், அத்துடன் வங்காளதேச நாட்டு வங்கி கணக்கில் இருந்த பல லட்சம் ரூபாயை, இந்திய பணமாக மாற்றி கொடுத்ததாகவும் சேக் இஸ்மாயில் கூறினார்.

இதையடுத்து சேக் இஸ்மாயில், ஷியாதுல் அகோன், அவரது மகன் சுகன் இஸ்மாயில் ஆகிய 3 பேரையும் மாதநாயக்கனஹள்ளி போலீசார் கைது செய்தார்கள். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ஆதார் கார்டு பெற்று கொடுத்த நபர்களை கைது செய்யவும் போலீசார் தீவிரம் காட்டினர்.

ஆதார் கார்டு கொடுத்தனர்

இந்த நிலையில், வங்காளதேசத்தை சேர்ந்தவர்களுக்கு ஆதார் கார்டு பெற்று கொடுத்ததாக அப்துல் அலீம், சுகேல் அகமது, முகமது இதாயத், சையத் மன்சூர், ரபியா என்ற ஆயிஷா, ராகேஷ் ஆகிய 6 பேரையும் மாதநாயக்கனஹள்ளி போலீசார் கைது செய்துள்ளனர். கைதானவர்களில் ஒருவர் கம்ப்யூட்டர் என்ஜினியர் ஆவார். இவர்களில் அப்துல் அலீம், பெங்களூரு மற்றும் பெங்களூரு புறநகரில் வசிக்கும் வங்காளதேச நாட்டை சேர்ந்தவர்களை அடையாளம் கண்டு, அவர்கள் நிரந்தரமாக இந்தியாவில் தங்குவதற்காக ஆதார் கார்டு, மாநகராட்சியில் இருந்து வழங்கும் ஆவணங்களை பெற்று கொடுத்தது தெரியவந்தது.

இதற்காக மாநகராட்சி அதிகாரிகள் பெயரில் போலி முத்திரைகள், ஆவணங்களை அப்துல் அலீம் மற்ற 5 பேருடன் சேர்ந்து தயாரித்துள்ளார். அந்த ஆதார் கார்டுகளை வங்காளதேச நாட்டை சேர்ந்தவர்களுக்கு ரூ.1,000 வரை விற்று வந்துள்ளனர். மேலும் சுகாதார அடையாள அட்டைகளையும் வங்காளதேச நாட்டை சேர்ந்தவர்களுக்கு வாங்கி கொடுத்தது தெரியவந்துள்ளது.

ரூ.4 கோடி மாற்றம்

கைதான 9 பேரிடமும் இருந்து மாநகராட்சி அதிகாரிகள் பயன்படுத்தும் 5 முத்திரைகள், 26 சான்றிதழ்கள், முத்திரைகள் தயாரிக்க பயன்படுத்திய எந்திரம், 16 செல்போன்கள், 2 மடிக்கணினிகள், 2 பிரிண்டர்கள், 31 ஆதார் கார்டுகள், 13 பான் கார்டுகள், 28 வாக்காளர் அடையாள அட்டைகள், 5 ஓட்டுனர் உரிமங்கள், 2 ஏ.டி.எம். கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைதானவர்களில் ஷியாதுல் அகோன் 13 வங்கி கணக்குகள் மூலமாக ரூ.4 கோடியை வங்காளதேச நாட்டு பணமாக மாற்றி, அந்த நாட்டுக்கு அனுப்பி வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது. அதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைதான 9 பேர் மீதும் மாதநாயக்கனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய பலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com