ராகுல்காந்தியிடம் 9 மணி நேரம் விசாரணை: எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் போராட்டம்

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை நேற்று 9 மணி நேரம் விசாரணை நடத் தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.
ராகுல்காந்தியிடம் 9 மணி நேரம் விசாரணை: எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் போராட்டம்
Published on

புதுடெல்லி,

மறைந்த முன்னாள் பிரதமர் நேரு நிறுவிய நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பங்குகள், காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான யங் இந்தியா நிறுவனத்துக்கு கைமாறியது.

வழக்கு

இதில் முறைகேடு நடந்ததாக பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கடந்த 2012-ம் ஆண்டு டெல்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மோதிலால் வோரா, ஆஸ்கர் பெர்னாண்டஸ், பத்திரிகையாளர் சுமன் துபே, தொழில் அதிபர் சாம் பிட்ரோடா ஆகியோர் மீது அவர் குற்றம்சாட்டி இருந்தார்.

இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததா என்பது குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. காங்கிரஸ் மூத்த தவைர்கள் மல்லிகார்ஜுன கார்கே, பவன்குமார் பன்சால் ஆகியோரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தியது.

சம்மன்

அதையடுத்து, சோனியாகாந்தி கடந்த 8-ந் தேதியும், ராகுல்காந்தி கடந்த 2-ந் தேதியும் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், வெளிநாட்டில் இருந்ததால் ராகுல்காந்தி வேறு தேதியை ஒதுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அதன் பேரில் 13-ந் தேதி (நேற்று) ஆஜராக வேண்டும் என்று அவருக்கு அமலாக்கத்துறை உத்தரவிட்டது.

சோனியாகாந்தி கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், அவரும் கூடுதல் கால அவகாசம் கோரினார். அதனால் அவர் 23-ந் தேதி ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை கூறியது.

144 தடை உத்தரவு

ராகுல்காந்தி நேற்று அமலாக்கத்துறை முன்பு ஆஜராவதையொட்டி, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு தொண்டர்கள் புடைசூழ ஊர்வலமாக ராகுல்காந்தி செல்வது என்று முடிவு செய்யப்பட்டது.

எனவே, முன்எச்சரிக்கை நடவடிக்கையாக, மத்திய டெல்லி பகுதி முழுவதும் போலீசார் 144 தடை உத்தரவு பிறப்பித்தனர். 4 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டது.

பேரணி

இந்தநிலையில், ராகுல்காந்தி நேற்று காலை தனது வீட்டில் இருந்து அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு காரில் வந்தார். அவருடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்காவும் வந்தார்.

காங்கிரஸ் தலைமையகத்தை சுற்றிலும் போலீசார் தடுப்புகளை அமைத்திருந்தனர். அங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு ஊர்வலமாக ராகுல்காந்தி புறப்பட்டார்.

அவருடன் ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட், சத்தீஷ்கார் மாநில முதல்-மந்திரி பூபேஷ் பாகல், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், ரந்தீப்சிங் சுர்ஜேவாலா ஆகியோரும் புறப்பட்டனர்.

ராகுல்காந்தியை வாழ்த்தியும், மத்திய அரசை கண்டித்தும் தொண்டர்கள் கோஷம் எழுப்பியபடி சென்றனர். ஆனால் சற்று தூரத்தில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது தொண்டர்கள் ஆவேசம் அடைந்தனர். சிலர் தடுப்புகள் மீது ஏறினர்.

ஆஜர்

இந்த சூழ்நிலையில், ராகுல்காந்தி காரில் ஏறி புறப்பட்டார். அவருடன் பிரியங்கா ஒரே காரில் சென்றார். அசோக் கெலாட், பூபேஷ் பாகல், ப.சிதம்பரம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் புடைசூழ மொத்தம் 7 கார்களில் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு ராகுல்காந்தி சென்றார். அவர் 'இசட் பிளஸ்' பாதுகாப்பில் இருப்பதால், சி.ஆர்.பி.எப். பாதுகாவலர்களும் உடன் சென்றனர்.

காலை 11.10 மணிக்கு ராகுல்காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு சென்றார். அமலாக்கத்துறை அலுவலகத்தை சுற்றிலும் சி.ஆர்.பி.எப். படையினரும், கலவர தடுப்பு போலீசாரும் நிறுத்தப்பட்டு இருந்தனர்.

அமலாக்கத்துறை உதவி இயக்குனர் அந்தஸ்து கொண்ட விசாரணை அதிகாரி முன்பு ராகுல்காந்தி ஆஜரானார். அவரிடம் சுமார் 20 நிமிடங்கள் கேள்விகள் கேட்கப்பட்டன. பிறகு சட்ட நடைமுறைகள் சிலவற்றை முடித்துக்கொண்டு, ராகுல்காந்தி மீண்டும் ஆஜரானார்.

கேள்விகள்

யங் இந்தியா நிறுவனம் தொடங்கப்பட்ட விதம், நேஷனல் ஹெரால்டு பத்திரிகை இயங்கிய விதம், அதற்கு காங்கிரஸ் கட்சி கொடுத்த நன்கொடை, பங்குகள் மாற்றம் ஆகியவை தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டன.

யங் இந்தியா நிறுவனத்தில் நிதி முறைகேடுகள் நடந்ததாக கூறப்படுவது பற்றி இந்த விசாரணை அமைந்திருந்தது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் 50-வது பிரிவின்கீழ் ராகுல்காந்தி தனது வாக்குமூலத்தை எழுதி கொடுத்ததாக தெரிகிறது.

சுமார் 2 மணி நேரம் நடந்த விசாரணை, பிற்பகல் 2.10 மணிக்கு மதிய உணவு இடைவேளைக்காக நிறுத்தப்பட்டது. ராகுல்காந்தி, பிரியங்காவுடன் வெளியே வந்தார். இருவரும் கங்காராம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள தங்கள் தாயார் சோனியாகாந்தியை போய் பார்த்தனர்.

மதிய உணவை முடித்துக்கொண்டு ராகுல்காந்தி மீண்டும் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு பிற்பகல் 3.30 மணிக்கு வந்து ஆஜரானார். அவரிடம் தொடர்ந்து இரவு 9 மணி வரை விசாரணை நடந்தது. இரு வேளையிலும் மொத்தம் 8 மணி நேரம் விசாரணை நடந்தது.

கைது

இதற்கிடையே, காலையில் ராகுல்காந்தி காரில் ஏறி சென்ற பிறகு காங்கிரஸ் தொண்டர்களும், நிர்வாகிகளும் தடையை மீறி அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு பேரணியாக செல்ல முயன்றனர்.

அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். சத்தீஷ்கார் மாநில முதல்-மந்திரி பூபேஷ் பாகல், ரந்தீப்சிங் சுர்ஜேவாலா, கே.சி.வேணுகோபால், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மல்லிகார்ஜூன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், முகுல் வாஸ்னிக், திக்விஜய்சிங், மீனாட்சி நடராஜன், திபேந்தர் ஹூடா, பி.எல்.புனியா, கவுரவ் கோகாய், பவன் கேரா மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

தலைவர்கள், டெல்லியில் உள்ள பதேபூர் பேரி, துக்ளக் சாலை, சரோஜினி நகர் ஆகிய போலீஸ் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். துக்ளக் சாலை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டவர்களை பிரியங்கா நேரில் சென்று பார்த்தார்.

முதல்-மந்திரி கருத்து

தான் எதற்கு கைது செய்யப்பட்டோம் என்று டெல்லி போலீசிடம்தான் கேட்க வேண்டும் என்று சத்தீஷ்கார் முதல்-மந்திரி பூபேஷ் பாகல் கூறினார். ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை, காவலில் வைக்கப்பட்டார் என்று டெல்லி போலீசார் விளக்கம் அளித்தனர்.

டெல்லியில் காங்கிரசார் ஆங்காங்கே போராட்டம் நடத்தி, அமலாக்கத்துறைக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அவர்களும் கைது செய்யப்பட்டனர்.

இதுபோல், பல்வேறு மாநிலங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர்.

அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை

இதுதொடர்பாக காங்கிரஸ் தலைமை செய்தித்தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜேவாலா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

டெல்லியில், 'அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை'யை மோடி அரசு அமல்படுத்தி இருக்கிறது. நள்ளிரவில் இருந்தே காங்கிரஸ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆயிரக்கணக்கான தொண்டர்களும், தலைவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ராகுல்காந்தியையும், காங்கிரசையும் பார்த்து மோடி அரசு பயப்படுவது ஏன்? நாங்கள் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அமைதியாக ஊர்வலம் செல்லவே விரும்புகிறோம்.

காங்கிரஸ் கட்சி உண்மைக்காக போராடுகிறது. அதை நசுக்க முடியாது. அநீதிக்கு எதிராக எங்கள் போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com