டெல்லி: அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்வு

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் 12 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன.
டெல்லி: அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்வு
Published on

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியின் ஷாஹ்தாரா பகுதி விவேக் விஹார் அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை சுமார் 3- 4 மணியளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவெனப் பரவியதால், கட்டிடத்திற்குள் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேற முயன்றனர்.

தகவல் அறிந்ததும் 12 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. சுமார் இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, காலை 6 மணியளவில் தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த இரண்டு பேர் சிகிச்சைக்காக அருகே உள்ள குரு தேக் பகதூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்தில் உயிரிழந்த 9 பேரில் 5 பேரின் உடல்கள் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்தும், மற்ற மூன்று பேரின் உடல்கள் படிக்கட்டிலும் மீட்கப்பட்டன. மற்றொருவரின் உடல் முதல் மாடியில் இருந்து மீட்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால், கட்டிடத்தின் பால்கனி வழியாக சுமார் 20 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இந்த விபத்து தொடர்பாக ஷாதாரா டிஜிபி ராஜேந்திர பிரசாத் மீனா கூறுகையில், “அதிகாலை 4 மணிக்குத் தகவல் வந்ததும் போலீசாரும், தீயணைப்புப் படையினரும் விரைந்தோம். பலரை பாதுகாப்பாக மீட்டோம். உயிரிழந்தோரின் உடல்களும் மீட்கப்பட்டு, தடயவியல் ஆய்வுக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இந்த தீ விபத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து தற்போதுவரை உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், ஏசி வெடித்ததே இதற்குக் காரணமாக இருக்கலாம் என அந்த பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர். அதை அதிகாரிகள் யாரும் உறுதி செய்யவில்லை. மக்கள் நெருக்கடி அதிகமாக உள்ள பகுதியான அங்கு, இன்று அதிகாலை நிகழ்ந்த தீ விபத்து, அந்த பகுதியையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com