

பெங்களூரு
கர்நாடகாவின் பெங்களூரு நகரை சேர்ந்தவர் சஷி பிரபா திவிவேதி. யோகா ஆசிரியை. கர்ப்பிணியாக இருக்கும் இவர் 35, 37, வார கர்ப்ப காலங்களில் வீடியோ பதிவு செய்து அதனை சமூக ஊடகத்தில் பகிர்ந்து வந்துள்ளார்.
ஆனால், நாள் ஆன பின்னரும், அவர் இதனை நிறுத்தவில்லை. பல யோகாசனங்களை செய்து வீடியோவாக பகிர்ந்து வருகிறார். 9 மாத கர்ப்பிணியான பின்னரும் அவர் இதனை தொடர்ந்துள்ளார்.
இது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. விவாத பொருளாகவும் மாறியுள்ளது. சமீபத்தில் சேலை அணிந்து சக்ராசனம் உள்ளிட்ட கடினம் வாய்ந்த ஆசனங்களையும் செய்து காட்டியுள்ளார். இந்த வீடியோவை 2 கோடி பேர் பார்வையிட்டு உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் லைக்கும் செய்துள்ளனர்.
எனினும், குழந்தையின் ஆரோக்கியத்திற்கு இது பாதுகாப்பா? என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். தேவையற்ற ஆபத்து செயல் என்றும், சமூக ஊடக வீடியோவுக்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் சிலர் தெரிவித்தனர்.
இதுபற்றி கூறும் பிரபா, கர்ப்பிணியாக யோகா செய்யும் காட்சிகளை மட்டுமே மக்கள் பார்க்கின்றனர். ஆனால், இதற்கு பின்னால் பல ஆண்டு கால கடின உழைப்பும், பயிற்சியும், உடல் கட்டுப்பாடும் உள்ளது. ஆனால், உடற்பயிற்சியோ அல்லது யோகாவோ செய்யும் முன்பு டாக்டரிடம் ஆலோசனை செய்து கொள்ளுங்கள் என அறிவுரையும் வழங்குகிறார்.
இந்த யோகா ஆசன செயல்களுக்கு, இவருடைய தாயார் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். கார் ஓட்டுவது அல்லது படிகளில் ஏறுவது ஆகியவற்றை விட யோகா செய்வது பாதுகாப்பானதே என்று குடும்பத்தினரிடம் விளக்கியிருக்கிறார். பல ஆண்டுகளாக பயிற்சி செய்து, தன்னுடைய உடலை நன்றாக புரிந்து வைத்திருக்கிறேன் என அவர் கூறுகிறார். இந்த விசயத்தில், பிரபாவின் கணவர் அவருக்கு ஆதரவாக இருக்கிறார்.