

புதுடெல்லி,
பாராளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: - இந்தியாவில் 18-வயதுக்கு மேற்பட்டவர்களில் 90 சதவீதம் பேர் ஒரு டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளனர். 70 சதவீதம் பேர் இரு தவணை தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டுள்ளனர். எஞ்சிய மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
கொரோனா பெருந்தொற்று ஒட்டு மொத்த உலகத்தையும் பாதித்துள்ளது. நம் நேசத்திற்கு உரிய பலரை நாம் இழந்துள்ளோம். இந்த நெருக்கடியான சூழலில், மத்திய மாநில மற்றும் உள்ளூர் அரசு நிர்வாகங்கள், மருத்துவர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள், விஞ்ஞானிகள், தொழில்முனைவோர் என அனைத்து தரப்பினரும் ஒரு அணியாக பணியாற்றினர்.
அரசாங்கத்திற்கும் குடிமக்களுக்கும் இடையிலான பரஸ்பர நம்பிக்கை, ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு நமது ஜனநாயகத்தின் வலிமைக்கு முன்னோடியில்லாத உதாரணம். இதற்காக, ஒவ்வொரு சுகாதார மற்றும் முன்கள பணியாளர்களையும் ஒவ்வொரு குடிமகனையும் நான் பாராட்டுகிறேன் என்றார்.