

கொப்பல்
கர்நாடகாவில் குரங்கு மிதித்து, தாக்கியதில் 91 வயது மூதாட்டி பலியான அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடகாவின் கொப்பல் மாவட்டத்தில் பி.டி. பாட்டீல் நகர் பகுதியில் வசித்து வருபவர் நஜமுனிசா பேகம் (வயது 91). இவர் கடந்த 19-ந்தேதி இரவு 7 மணியளவில் வீட்டின் வராண்டா பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டார்.
அப்போது வீட்டின் பின்புறத்தில் திடீரென ஏதோ சத்தம் கேட்க, பேகம் மெதுவாக நடந்து சென்று அந்த பக்கம் எட்டிப்பார்த்துள்ளார். பெரிய குரங்கு ஒன்று வீட்டு வளாகத்திற்குள் புகுந்திருந்தது. அவரை பார்த்ததும் அந்த குரங்கு மிரண்டது. குரங்கை பார்த்ததும் பயந்து போன பேகம், உடனடியாக வீட்டுக்குள் செல்வதற்காக மெதுவாக நடந்து சென்றுள்ளார்.
அப்போது ஓடி வந்த குரங்கு, அவர் மீது இரு கால்களால் உதைத்து விட்டு ஓடி, சுவரின் மீது ஏறி நின்று கொண்டது. இந்த தாக்குதலில், பேகம் அப்படியே கீழே விழுந்து விட்டார். பலத்த காயமடைந்த அவரால் எழுந்திருக்க முடியவில்லை. பேகமின் சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்து மற்றொரு பெண் உதவிக்காக வெளியே ஓடி வந்துள்ளார்.
அவர் கீழே விழுந்த கிடந்த மூதாட்யை எழுப்ப முயன்றபோது, சுவரின் மீது நின்றிருந்த குரங்கு பாய்ந்து அவரையும் தாக்கியது. இதில், அவரும் காயமடைந்துள்ளார். சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் ஓடி வந்தனர். இந்த வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது.
இதன்பின்னர் அவர்கள் இருவரும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதில், 2 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த பேகம் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்து விட்டார்.