மத்திய பிரதேசத்தில் பரிதாபம் கால்வாயில் பஸ் கவிழ்ந்து 37 பேர் பலி

மத்திய பிரதேச மாநிலத்தில் கால்வாய் தண்ணீரில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 37 பேர் பரிதாபமாக இறந்தனர்.
மத்திய பிரதேசத்தில் பரிதாபம் கால்வாயில் பஸ் கவிழ்ந்து 37 பேர் பலி
Published on

போபால்,

மத்திய பிரதேசம் மாநிலம் சிதி பகுதியில் இருந்து சத்னா நகரை நோக்கி 54 பயணிகளுடன் பஸ் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. பட்னா கிராமத்தின் அருகே பஸ் சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.

பின்னர் சாலையில் இருந்து விலகி அருகில் இருந்த பெரிய கால்வாய்க்குள் கண் இமைக்கும் நேரத்தில் கவிழ்ந்து தண்ணீரில் மூழ்கியது.

கால்வாய் தண்ணீரில் பஸ் மூழ்கியதால் பயணிகள் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்ற அபாய குரல் எழுப்பினர். அங்கிருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கும், தீயணைப்பு மீட்பு படையினருக்கும் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த மீட்பு படையினர் கால்வாயில் இறங்கி மீட்பு பணியில் ஈடுபட்டனர். தண்ணீரில் தத்தளித்த 7 பேரை உயிருடன் மீட்டனர்.

பின்னர் அவர்களை தயார் நிலையில் இருந்த ஆம்புலன்சு மூலம் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தில் தண்ணீரில் மூழ்கி 37 பேரின் உடல்களை மீட்பு படையினர் மீட்டனர். பஸ் தண்ணீருக்குள் மூழ்கிவிட்டதால் மீதமுள்ளவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை.

கால்வாயில் தண்ணீர் அதிகமாக செல்வதால் பயணிகளை வெள்ளம் அடித்துச் சென்று இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. அவர்களை படகுகள் மூலம் மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.

இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த விபத்து குறித்து மத்திய பிரதேச மாநில முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில் இந்த விபத்து மிகவும் துயரமானது. மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன. மீட்பு பணிகளை நேரில் ஆய்வு செய்ய மந்திரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த மாநிலமும் உறுதுணையாக இருக்கும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com