இந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் 97.33 சதவீதமாக உயர்வு

இந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் 97.33 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் 97.33 சதவீதமாக உயர்வு
Published on

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிரான போரில் இந்தியா தொடர்ந்து வெற்றி நடை போட்டு வருகிறது. வலுவான சுகாதார கட்டமைப்பாலும், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் சுகாதார பணியாளர்களாலும் கொரோனா மீட்பில் இந்தியா தொடர்ந்து உலகளவில் முதல் இடத்தை தக்கவைத்து வருகிறது.

நேற்றும் கூட 24 மணி நேரத்தில் நாட்டில் 11 ஆயிரத்து 833 பேர் இந்த வைரஸ் தொற்றில் இருந்து குணம் அடைந்து பல்வேறு ஆஸ்பத்திரிகளில் இருந்து வீடுகளுக்கு திரும்பி இருக்கிறார்கள். இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் பெருந்தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 6 லட்சத்து 44 ஆயிரத்து 858 ஆக உயர்ந்து இருக்கிறது. அதே நேரத்தில் மீட்பு விகிதம், 97.33 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது உலகின் அதிகபட்ச மீட்பு விகிதங்களில் ஒன்று என்பது அடிக்கோடிட்டு காட்டத்தக்கதாகும்.

இதற்கிடையே ஒரே நாளில் புதிதாக 11 ஆயிரத்து 610 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவல் பதிவாகி உள்ளது.

அதிகபட்சமாக கேரளாவில் 4 ஆயிரத்து 937 பேருக்கும், மராட்டியத்தில் 3 ஆயிரத்து 663 பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 9 லட்சத்து 37 ஆயிரத்து 320 ஆக அதிகரித்து இருக்கிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படுகிற உயிர் பலி தொடர்ந்து கட்டுக்குள் இருக்கிறது. அந்த வகையில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 100 ஆக பதிவாகி உள்ளது. இவர்களில் 39 பேர் மராட்டிய மாநிலத்தினர் ஆவார்கள். கேரளாவில் 18 பேர் கொரோனாவால் மரணத்தை தழுவி உள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவுக்கு இரையானோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 55 ஆயிரத்து 913 ஆக அதிகரித்துள்ளது. 18 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் ஒருவர்கூட உயிரிழக்கவில்லை என்ற தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பலி விகிதம் 1.43 சதவீதமாக உள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து மீள்வதற்காக நேற்றைய நிலவரப்படி 1 லட்சத்து 36 ஆயிரத்து 549 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சையில் இருக்கிறார்கள். இது மொத்த பாதிப்பில் 1.25 சதவீதம் மட்டுமே ஆகும்.

இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 76 ஆயிரத்து 943 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இதன் மூலம் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் மொத்த எண்ணிக்கை 90 லட்சத்தை நெருங்கியது. இதுவரை 89 லட்சத்து 99 ஆயிரத்து 230 ஆக உயர்ந்து இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com