28 நாட்களில் 91,583 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து உள்ளது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை தெரிவித்து உள்ளது.
நியூயார்க்,
சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரோனா பாதிப்பு முதன்முறையாக கண்டறியப்பட்டது. பின்னர், அது உலக நாடுகளுக்கு பரவியது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக, உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
இந்தியாவில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி 2 கட்டங்களாக போடப்பட்டது. இதற்காக கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இதுதவிர பூஸ்டர் டோஸ்களும் போடப்பட்டன. இதன்பின்னர் பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தது.
இந்நிலையில், தெற்கு ஆசியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று சமீப வாரங்களாக அதிகரித்து வருகிறது. இந்தியா மற்றும் பல்வேறு ஆசிய நாடுகளில் புதிய வகை கொரோனா தொற்றுகள் அதிகரித்து காணப்படுகின்றன. இதனால், சீனா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் கண்காணிப்பு முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அந்நாட்டு அரசாங்கங்கள் தங்களுடைய மக்களிடம் முக கவசங்களை அணியும்படி வலியுறுத்தி வருகின்றன.
இந்தியாவில் மே 28-ந்தேதி வரையில் 1,009 தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. இவற்றில் கேரளா (430), மராட்டியம் (209) மற்றும் டெல்லி (104) ஆகியவை அதிக பாதிப்புகளை சந்தித்து உள்ளன. இதேபோன்று பஞ்சாப், கர்நாடகா, தமிழகம், குஜராத்திலும் தொற்று அதிகரித்து வருகிறது.
எனினும், இதனால் லேசான அறிகுறிகளே ஏற்படுகின்றன என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்து உள்ளது. சீனாவில் மார்ச்சுடன் ஒப்பிடும்போது, மே மாதத்தில் தொற்று விகிதம் 6.3 சதவீதம் என்ற அளவில் இருந்து 15.8 சதவீதம் என அதிகரித்தது. 1.68 லட்சம் பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. 9 பேர் பலியாகி உள்ளனர்.
இதேபோன்று தாய்லாந்தில், 1.87 லட்சம் தொற்று உறுதியாகி உள்ளது. 44 பேர் மரணம் அடைந்து உள்ளனர். மே 18 முதல் 24 வரையில் 8 பேர் உயிரிழந்து உள்ளனர். சிங்கப்பூரில் 14,200 பேருக்கு மே மாத தொடக்கத்தில் தொற்று உறுதியாகி இருந்தது.
இதுபற்றி உலக சுகாதார அமைப்பும் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகளவில் மே 11 வரையிலான 28 நாட்களில் 91,583 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது. இதனால், பொது மக்கள் முக கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட விசயங்களை பின்பற்றும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.






