92 எம்.பி.க்கள் சஸ்பெண்டு விவகாரம்; நாடாளுமன்றத்திற்கு வெளியே எதிர்க்கட்சிகள் போராட்டம்

நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் சஸ்பெண்டு செய்யப்பட்ட மொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கை 92 ஆக உள்ளது.
92 எம்.பி.க்கள் சஸ்பெண்டு விவகாரம்; நாடாளுமன்றத்திற்கு வெளியே எதிர்க்கட்சிகள் போராட்டம்
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில், மக்களவைக்குள் சிலர் அத்துமீறலில் ஈடுபட்டது பற்றி அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அடுத்தடுத்து சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேசியவாத காங்கிரசின் சரத் பவார் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த காந்தி சிலையின் முன் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற மக்களவைக்குள் சிலர் அத்துமீறலில் ஈடுபட்டது பற்றி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அறிக்கை அளிக்க கோரியும், இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை கண்டித்தும், எதிர்க்கட்சிகள் நேற்று அமளியில் ஈடுபட்டன. இதனால், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து அமைதியாக இருக்கும்படி கேட்டு கொண்டார்.

எதிர்க்கட்சியின் அமளியால், அவை தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட கூடிய நிலை ஏற்பட்டது. இதன்பின் மதியம் 3 மணிக்கு தலைவர் ராஜேந்திர அகர்வால் தலைமையில் அவை கூடியபோது, மீண்டும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால், அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டனர் என கூறியும், அவையின் கண்ணியம் மற்றும் மதிப்பு ஆகியவற்றை காக்கும் வகையிலும் 33 எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்படுகின்றனர் என சபாநாயகர் அதிரடியாக உத்தரவிட்டார்.

இதேபோன்று மேலவையிலும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்களில் 45 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இதனால், நேற்று ஒரே நாளில் 78 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

இதன்படி, தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, ஆ. ராசா, தயாநிதி மாறன், சுமதி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர். உறுப்பினர்கள் நவாஸ்கனி, அண்ணாதுரை, கலாநிதி வீராசாமி, எஸ்.எஸ். பழனி மாணிக்கம் உள்ளிட்டோரும் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

காங்கிரஸ் எம்.பி.க்களான விஜய் வசந்த், திருநாவுக்கரசர், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கவுரவ் கோகாய் உள்ளிட்டோரும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். சில நாட்களுக்கு முன் தி.மு.க. எம்.பி.க்கள் உள்பட 14 பேர் மக்களவையில் சஸ்பெண்டானார்கள்.

இதனால், நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் சஸ்பெண்டு செய்யப்பட்ட மொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கை 92 ஆக உள்ளது. ஒரு கூட்டத்தொடரில் அதிகளவிலான உறுப்பினர்கள் சஸ்பெண்டு செய்யப்படுவது இதுவே முதன்முறையாகும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com