ஊரடங்கில் சிறப்பு ரெயிலில் பயணித்த 97 புலம்பெயர்ந்தோர் உயிரிழப்பு; மத்திய மந்திரி தகவல்

கொரோனா வைரசை தொடர்ந்து பிறப்பித்த ஊரடங்கின்போது சிறப்பு ரெயிலில் பயணம் செய்த புலம்பெயர்ந்தோரில் 97 பேர் உயிரிழந்து உள்ளனர் என மேலவையில் இன்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஊரடங்கில் சிறப்பு ரெயிலில் பயணித்த 97 புலம்பெயர்ந்தோர் உயிரிழப்பு; மத்திய மந்திரி தகவல்
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 14ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் பல்வேறு விவகாரங்களை இரு அவை உறுப்பினர்களும் எழுப்பி வருகின்றனர். நாடாளுமன்ற மேலவையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. தெரீக் ஓ பிரையன் நேற்று பேசும்பொழுது, ஊரடங்கால் உயிரிழந்தவர்கள் பற்றிய எண்ணிக்கையை அரசு தெரிவிக்க வேண்டும் என கூறினார்.

எனினும், இது மாநில அரசுடன் தொடர்புடையது. இதற்கு மத்திய அரசிடம் தரவுகள் இல்லை என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த கேள்விக்கு மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் இன்று அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில், செப்டம்பர் 9ந்தேதி வரையிலான தகவலின்படி, கொரோனா வைரசின் பாதிப்புகளை தொடர்ந்து பிறப்பித்த ஊரடங்கின்போது சிறப்பு ரெயிலில் பயணம் செய்த புலம்பெயர்ந்தோரில் 97 பேர் உயிரிழந்து உள்ளனர் என மாநில போலீசார் தெரிவித்துள்ளனர். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவித்து உள்ளார்.

இந்த 97 பேரில் 87 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன. மாநில போலீசாரிடம் இருந்து இதுவரை 51 பிரேத பரிசோதனை அறிக்கைகள் கிடைத்து உள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மே 1ந்தேதியில் இருந்து ஆகஸ்டு 31ந்தேதி வரை 4,621 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு 63.19 லட்சம் பேர் பயணித்து தங்களது சொந்த ஊருக்கு சென்றடைந்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com