

பாட்னா,
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் வைஸ். 98 வயதான இவர், கடந்த 1938ம் ஆண்டு தனது பட்டப்படிப்பை முடித்து, வக்கீலுக்கு படித்துள்ளார். பின்னர் வேலைக்கு சென்றதால் முதுகலை பட்டம் பெறவில்லை. தனது வாழ்நாளில் எப்படியாவது முதுகலை பட்டம் பெற்றுவிட வேண்டும் என்று கனவு கண்ட ராஜ்குமார் வைஸ், கடந்த 2015ம் ஆண்டு நாளந்தா திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் முதுகலை (எம்.ஏ.) படிப்பில் சேர்ந்தார்.
இதில் தேர்ச்சி பெற்ற அவருக்கு, பாட்னாவில் நேற்று நடந்த விழாவில் மேகாலயா கவர்னர் கங்காபிரசாத் பட்டம் வழங்கி பாராட்டு தெரிவித்தார். இந்த பல்கலைக்கழகத்தில் 98 வயதில் பட்டம் பெறும் முதல் முதியவர் ராஜ்குமார் வைஸ் தான் என்று பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.பி.சின்கா தெரிவித்தார்.தள்ளாத வயதில் நடக்க கூட இயலாத ராஜ்குமார் வைஸ், 3 சக்கர வண்டியில் வந்து தனது பட்டத்தை பெற்றார். கல்வி கற்க வயது ஒரு தடை இல்லை என்பதற்கு ராஜ்குமார் வைஸ் ஒரு உதாரணமாக திகழ்கிறார்.
பட்டம் பெற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்குமார் வைஸ், நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். நான் நீண்ட காலம் கடினமாக உழைத்தேன். எனது முதுகலை படிப்பை நிறைவு செய்துள்ளேன் என்பது தற்போது மகிழ்ச்சி அளிக்கிறது. இளைஞர்கள் தங்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். என்றார்.