

புவனேஸ்வர்,
கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு நாடு முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு மார்ச்சில் ஊரடங்கு அமலானது. இதனால் அத்தியாவசிய பணிகளை தவிர வேறு விசயங்களுக்கு வெளியே செல்ல மக்கள் அனுமதிக்கப்படவில்லை.
இந்த ஊரடங்கின்பொழுது, மரக்கன்று நடுவது உள்ளிட்ட சமூக நலன் சார்ந்த செயல்களில் சிலர் தங்களை ஈடுபடுத்தி கொண்டனர். சமையல் செய்வது, உடற்பயிற்சி மேற்கொள்வது, புத்தகங்களை படிப்பது போன்ற பொழுதுபோக்கு விசயங்களிலும் ஈடுபட்டனர்.
ஒடியாவின் புவனேஸ்வரில் வசித்து வரும் சிறுவன் ஆயுஷ் குமார் குந்தியா (வயது 10). ஊரடங்கால் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்த அந்த சிறுவன் அதனை பயனுள்ள ஒன்றாக மாற்றி கொண்டார்.
அவர் தனது தாய் மொழியான ஒடியாவில் 104 பக்கங்களை கொண்ட ராமாயணம் ஒன்றை எழுதியுள்ளார். அதற்கு பிலாகா ராமாயணா (குழந்தைகளுக்கான ராமாயணம்) என்றும் பெயரிட்டு உள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச்சில் ராமாயண தொடரை பார்க்கும்படி சிறுவனின் மாமா ஆயுஷிடம் கூறியுள்ளார். பின்னர் ராமாயணம் பற்றி ஏதேனும் எழுதும்படியும் கூறியுள்ளார். இதுபற்றி சிறுவன் ஆயுஷ் குமார் கூறும்பொழுது, தொலைக்காட்சியில் ராமாயண தொடரை பார்த்து, ஒவ்வொரு எபிசோடையும் ஒடிய மொழியில் எனது நோட்டு புத்தகத்தில் எழுதினேன்.
இந்த புத்தகம் எழுதி முடிக்க எனக்கு இரண்டு மாதங்கள் ஆகின. ராமாயணத்தில், கடவுள் ராமர் தனது வீட்டை விட்டு 14 ஆண்டுகள் வனவாசம் சென்றது, பஞ்சாவதி வனத்தில் சீதாதேவியை ராவணன் கடத்தி சென்றது போன்ற பல்வேறு பொன்னான தருணங்களை பற்றி எழுதியுள்ளேன்.
14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து அயோத்தியா திரும்பிய அவரை மக்கள் எப்படி வரவேற்றனர் என்பது பற்றியும் விளக்கி உள்ளேன் என கூறும் சிறுவன் ஆயுஷ், வாழ்வில் புதிய உயரங்களை அடைய ஒவ்வொருவரும், வாசிக்கும் மற்றும் எழுதும் பழக்கம் வைத்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.