கேரளாவில் அரசு ஆஸ்பத்திரி சிகிச்சையில் 100 வயதைக் கடந்த ஒருவர் கொரோனாவில் இருந்து மீண்டார்

கேரளாவில் 100 வயது கடந்த ஒருவர், அரசு ஆஸ்பத்திரி சிகிச்சையில் கொரோனாவில் இருந்து வெற்றிகரமாக மீண்ட அதிசயம் அரங்கேறி இருக்கிறது.
கேரளாவில் அரசு ஆஸ்பத்திரி சிகிச்சையில் 100 வயதைக் கடந்த ஒருவர் கொரோனாவில் இருந்து மீண்டார்
Published on

கொச்சி,

சீனாவில் தோன்றி உலக நாடுகளையெல்லாம் ஆட்டிப்படைத்து வருகிற கொரோனா வைரஸ் தாக்கம், முதியவர்களைத்தான் அதிகமாக குறி வைத்து தாக்குகிறது. நோய் எதிர்ப்புச்சக்தி குறைவாக உள்ளதால் 60 வயது கடந்தவர்கள்தான் அதிகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கவும் நேரிடுகிறது. உலகமெங்கும் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

ஆனால் கேரள மாநிலத்தில், கொல்லத்தில் ஏற்கனவே ஆஸ்மா பீவி என்ற 105 வயது மூதாட்டி, கொரோனா பாதித்தபோது கொல்லம் பரிப்பள்ளி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்தியில் சிகிச்சை பெற்று குணம் அடைந்தார்.

இப்போது சதம் அடித்து, தற்போது 103 வயதாகிற குஞ்சாலி பரீத் என்ற முதியவர், அரசு ஆஸ்பத்திரி சிகிச்சையில் கொரோனாவில் இருந்து மீண்டிருக்கிறார். இதுபற்றிய தகவல்கள் கேரளாவை பரபரக்க வைத்துள்ளன. அலுவா கீழ்மேடு என்ற இடத்தை சேர்ந்தவர்தான் குஞ்சாலி பரீத்.

இவர் முதலில் கடுமையான காய்ச்சல், உடல் வலியால் அவதிப்பட்டார். அதைத் தொடர்ந்து கடந்த மாதம் 28-ந் தேதி அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. உடனே அவர் அரசு கலமச்சேரி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

கடுமையான அறிகுறிகள் தென்படாதபோதும், வயதினைக் கருத்தில் கொண்டு அவருக்கு சிகிச்சை அளிக்க ஆஸ்பத்திரி நிர்வாகம் ஒரு சிறப்பு மருத்துவ குழுவை அமைத்து தீவிர சிகிச்சை அளித்தது. இதன்பலனாக அவர் 20 நாளில் பூரண குணம் அடைந்தார்.

ஆஸ்பத்திரியில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்து, வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கு ஆஸ்பத்திரி ஊழியர்கள் சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.

இதுபற்றி கேரள மாநில சுகாதார மந்திரி கே.கே. ஷைலஜா பெருமிதத்துடன் கூறுகையில், பரீத் முதிய வயதினராக இருந்ததால், கொரோனாவால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு இருந்தது. ஆனால் குறைவான காலத்தில் அவர் குணம் அடைந்திருப்பதற்கு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அவருக்கு செய்த தரமான சிகிச்சையும், சுகாதார ஊழியர்களின் அர்ப்பணிப்புமிக்க சேவையும்தான் காரணம் என குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com