

கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 23-ந்தேதி மற்றும் 29-ந்தேதி ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அங்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் ஜர்கம் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று கலந்து கொண்டு பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது;-
“திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கான அரசாங்கத்தை அமைக்க விரும்பியது. அதை ஆட்சியில் இருந்து அகற்ற வாக்காளர்கள் ஒன்றுபட வேண்டும்.
இந்த தேர்தல் மேற்கு வங்க மண்ணின் வளமான பாரம்பரியத்தைக் காப்பாற்றுவதற்கான தேர்தலாகும். இது மாநிலத்தின் அடையாளத்தை காப்பதற்கான போர். இன்று, மேற்கு வங்கம் தனது அடையாளத்தை இழந்துவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
திரிணாமுல் காங்கிரஸ் செல்லும் பாதை மிகவும் ஆபத்தானது. மாநில மக்களின் உரிமைகளை பாதுகாப்பதை விடுத்து, ஊடுருவல்காரர்களின் மதத்தையும், மொழியையும், பழக்கவழக்கங்களையும் மட்டுமே பாதுகாக்கும் ஒரு அரசாங்கம் அது.
திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு எதிரான அதிருப்தி, மாநிலத்தின் சமூகங்கள் மற்றும் பிராந்தியங்கள் முழுவதும் பரவியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ், மக்களின் பிரச்சனைகளைப் புறக்கணித்து, ஊழல் மற்றும் மிரட்டிப் பணம் பறிக்கும் ஒரு ஆட்சியை நடத்தியது.
ஒருவர் வீடு கட்ட வேண்டுமென்றால், அவர் திரிணாமுல் காங்கிரஸின் ரவுடி கும்பலை சார்ந்திருக்க வேண்டியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களும் எம்.எல்.ஏ.க்களும், உங்கள் பிரச்சனைகளைப் பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை. அவர்கள் தங்கள் பைகளை நிரப்புவதில் மும்முரமாக உள்ளனர்.
மாநிலத்தின் பல பகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் பழங்குடியினரின் நிலங்களை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வந்தனர். பழங்குடியினருக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.”
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.