

டேராடூன்,
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான இமாசல பிரதேசத்தின் கின்னார் மாவட்டத்தில் நுகல்சாரி பகுதியில் கடந்த 11ந்தேதி பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பேருந்து, லாரி மற்றும் 4 கார்கள் சிக்கி கொண்டன.
இந்த நிலச்சரிவில் வாகனங்கள் சிக்கியதில் அதில் பயணம் செய்தவர்களில் பலர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நிலச்சரிவில், 28 பேர் உயிரிழந்து உள்ளனர் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான உத்தரகாண்டிலும் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. நைனிடால் பகுதியில் சாலையில் பேருந்து ஒன்று 14 பயணிகளை ஏற்றி கொண்டு நேற்று சென்றுள்ளது.
திடீரென மலை பகுதியில் இருந்து நிலச்சரிவு ஏற்பட்டு சாலையில் வந்து விழுந்துள்ளது. இந்த நிலச்சரிவால் மண், கற்கள் இவற்றுடன் மரங்களும் வேருடன் சாய்ந்து விழுந்துள்ளன. இதனால் பேருந்து ஓட்டுனர் உஷாராக வண்டியை முன்பே நிறுத்தி விட்டார்.
நிலச்சரிவை கண்ட பயணிகளில் இளைஞர்கள் சிலர் ஜன்னல் வழியே வெளியே குதித்தும், சிலர் வாசல் வழியே வெளியேறியும் தப்பியோடினர். இதன்பின்பு பேருந்து பின்னோக்கி இயக்கப்பட்டு பாதுகாப்பான பகுதிக்கு சென்றது.
ஒரு சில நிமிடங்கள் முன்னே சென்றிருந்தால் பேருந்து விபத்தில் சிக்கி பெருமளவு சேதம் ஏற்பட்டிருக்க கூடும். பேருந்து ஓட்டுனரின் முன்னெச்சரிக்கையாலும் பயணிகள் உயிர் தப்பியுள்ளனர். இதுபற்றிய வீடியோ வெளிவந்து வைரலாகி வருகிறது.