

பெங்களூரு:-
கன்னட திரைஉலகில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் துனியா விஜய். இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு பெங்களூரு வசந்த்நகரில் ஆணழகன் போட்டி நடந்தது. அப்போது துனியா விஜய்க்கும், ஆணழகனான பானிபூரி கிட்டியின் உறவினர் மாருதி கவுடாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில் மாருதி கவுடாவை, துனியா விஜய் தனது ஆதரவாளர்களுடன் காரில் கடத்தி சென்றதாக ஐகிரவுண்டு போலீஸ் நிலையத்தில் பானிபூரி கிட்டி புகார் அளித்தார்.
அதுபோல தனது காரை சேதப்படுத்தியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாக பானிபூரி கிட்டி மீது துனியா விஜயும் புகார் அளித்தார். புகார்களின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். ஆனால் பானிபூரி கிட்டி மீது சுமத்தப்பட்ட புகாருக்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி அவர் மீது பதிவான வழக்கை போலீசார் ரத்து செய்ததாக கூறப்படுகிறது. இதனை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் துனியா விஜய் மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனு மீதான இறுதி விசாரணையின் போது பானிபூரி கிட்டி, அவரது உறவினர் மாருதி கவுடா மீது வழக்குப்பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து பானிபூரி கிட்டி, மாருதி கவுடா மீது ஐகிரவுண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.