3 ஆண்டுகள் வளர்த்த குழந்தை... சட்டப்படி தத்தெடுக்கவில்லை என பிரித்த அதிகாரிகள்

குழந்தையை உடனடியாக அந்த வளர்ப்பு பெற்றோரிடமே ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
3 ஆண்டுகள் வளர்த்த குழந்தை... சட்டப்படி தத்தெடுக்கவில்லை என பிரித்த அதிகாரிகள்
குழந்தை
Published on: 

ஐதராபாத்,

சட்டப்பூர்வமாக தத்தெடுக்கவில்லை எனக் கூறி, 3 ஆண்டுகள் பெற்ற பிள்ளையாக வளர்க்கப்பட்ட குழந்தையை அதிகாரபூர்வமாக பிரித்தெடுத்த சம்பவத்தில், "குழந்தையை வளர்ப்பு பெற்றோரிடமே ஒப்படைக்க வேண்டும்" என தெலங்கானா ஐகோர்ட்டு உத்தரவை பிறப்பித்துள்ளது.

தாய் இழந்த குழந்தை

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த குழந்தை இல்லாத தம்பதி, பிறந்து 5 நாட்களேயான ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். அந்த குழந்தையின் பெற்ற தாய், பிரசவித்த 5 நாட்களிலேயே உயிரிழந்ததால், இந்த தம்பதியினர் அந்த குழந்தையை தங்களது சொந்தக் குழந்தையாகவே பாவித்து, கடந்த 3 ஆண்டுகளாக கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்துள்ளனர்.

அதிகாரிகளின் நடவடிக்கை

இந்த நிலையில், இந்த தம்பதியினர் குழந்தையை சட்டப்பூர்வமான தத்தெடுப்பு நடைமுறைகளை பின்பற்றி தத்தெடுக்கவில்லை என்பது குழந்தை நலக்குழு அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து, அதிகாரிகள் சட்ட விதிகளின்படி அந்த குழந்தையை தம்பதியிடமிருந்து பிரித்து, அரசு குழந்தை பராமரிப்பு மையத்திற்கு மாற்றினர்.

கதறி அழுத சிறுவன் - வைரல் வீடியோ

முறையான சட்ட நடைமுறைகள் இல்லை என்றாலும், 3 ஆண்டுகளாக அரும்பாடுபட்டு வளர்த்த குழந்தையை பிரிந்த தம்பதி நிலைகுலைந்து போயினர். சமீபத்தில், பராமரிப்பு மையத்தில் இருந்த தங்களது 3 வயது செல்ல மகனை பார்க்க வளர்ப்பு பெற்றோர் சென்றுள்ளனர்.

அப்போது, தங்களைப் பார்த்ததும் ஓடிவந்து, கதறி அழுது அவர்களை விட்டு பிரிய மனமில்லாமல் அந்த சிறுவன் இறுக கட்டிக்கொண்டான். காண்போர் நெஞ்சை கறைய வைக்கும் இந்த உருக்கமான காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி, பார்ப்போரை கண்ணீர் சிந்த வைத்ததுடன், பெரும் வைரலானது.

நீதிமன்றம் தீர்ப்பு

இதற்கிடையே, தங்களது குழந்தையை தங்களிடமே ஒப்படைக்க கோரி வளர்ப்பு பெற்றோர் தெலங்கானா ஐகோர்ட்டில் அவசர வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள், குழந்தையை முறையான சட்ட நடைமுறைகளை பின்பற்றி தத்தெடுக்கவில்லை என்றாலும், கடந்த 3 ஆண்டுகளாக அக்குழந்தையை வளர்த்த பெற்றோரின் பாசத்தையும், குழந்தையின் தற்போதைய மனநிலையையும் புறந்தள்ளிவிட முடியாது. எனவே, குழந்தையை உடனடியாக அந்த வளர்ப்பு பெற்றோரிடமே ஒப்படைக்க வேண்டும்" என உத்தரவிட்டனர். ஐகோர்ட்டின் இந்த மனிதநேயமிக்க தீர்ப்பு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

X