பயங்கரவாதி ஷாரிக் தயாரித்த குக்கர் குண்டு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்த கூடியது; தடயஅறிவியல் நிபுணர்கள் திடுக்கிடும் தகவல்

பயங்கரவாதி ஷாரிக் தயாரித்த குக்கர் குண்டு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்த கூடியது என தடயஅறிவியல் நிபுணர்கள் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாதி ஷாரிக் தயாரித்த குக்கர் குண்டு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்த கூடியது; தடயஅறிவியல் நிபுணர்கள் திடுக்கிடும் தகவல்
Published on

பெங்களூரு:

வீடியோக்களை பார்த்து குண்டு தயாரித்தார்

மங்களூரு ஆட்டோ குண்டு வெடிப்பு வழக்கில் சிக்கியுள்ள பயங்கரவாதி ஷாரிக் குக்கர் வெடிகுண்டை அவரே தயாரித்துள்ளார். எம்.பி.ஏ. பட்டதாரியான அவர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தந்தையுடன் ஜவுளி வியாபாரத்தை கவனித்து வந்துள்ளார். சிவமொக்காவில் சுதந்திர தின பவள விழாவின் போது வீரசாவர்க்கர் படத்துடன் பேனர் வைத்த விவகாரத்தில் கலவரம் ஏற்பட்டது. இதில் மாஸ் முனீர், சையது யாசினை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்ததும் தனது வீட்டில் இருந்து ஷாரிக் தலைமறைவாகிவிட்டார்.

அதன் பின்னர் அவர் தமிழ்நாடு கோவை, ஊட்டி, கேரள மாநிலம் ஆலப்புழா உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் அவர் மைசூருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். அங்கிருந்தப்படி ஆன்-லைனில் வெடிப்பொருட்களை வாங்கியதாகவும், கோவையில் இருந்து அவருக்கு வெடிப்பொருட்கள் பார்சலில் அனுப்பப்பட்டதாகவும், அதன் மூலம் யூ-டியூப் வீடியோக்களை பார்த்தும், பயங்கரவாத அமைப்பின் சேனல்களை பார்த்து குக்கர் வெடிகுண்டை அவரே தயாரித்த தகவலும் வெளியாகியுள்ளது.

பெரிய அளவில் பாதிப்பு

அவர் தயாரித்த குக்கர் குண்டை மங்களூரு பம்ப்வெல் மேம்பால பகுதியில் வெடிக்க திட்டமிட்டுள்ளார். மங்களூரு நாகுரிக்கு வந்த ஷாரிக் ஆட்டோவில் ஏறி சென்ற போதே குண்டு வெடித்து சிதறியது. பாதிப்பும் பெரிய அளவில் ஏற்படவில்லை. வெடிகுண்டு தயாரிப்பது சரிவர தெரியாததால் அந்த குக்கர் வெடிகுண்டு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது.

ஆனால் குக்கர் வெடி குண்டை ஷாரிக் சரியாக தயாரித்து இருந்தால், அந்த வெடிகுண்டு வெடித்து பெரிய அளவில் பாதிப்பையும், உயிர்சேதத்தையும் ஏற்படுத்தி இருக்கும் என்பதும் தடயஅறிவியல் நிபுணர்கள் ஆய்வு செய்ததில் தெரியவந்துள்ளது.

3 லிட்டர் குக்கரில் வெடிப்பொருள்

அதாவது, தடய அறிவியல் நிபுணர் அறிக்கையில், 3 லிட்டர் கொள்ளளவு கொண்ட குக்கரில் வெடிக்கும் ஜெல் இருந்தது. இந்த வெடிகுண்டு ஒரு டெட்டனேட்டர், பிளஸ் மற்றும் மைனஸ் வயர்களை இணைக்கும் வசதியையும் கொண்டிருந்தது. பிளஸ் மற்றும் மைனஸ் வயர் இணைக்கப்படவில்லை எனில் டெட்டனேட்டர் வெடிக்காமல் ஜெல் மட்டுமே தீப்பிடிக்கும். ஜெல் தீப்பிடித்தால், சிறு வெடிப்பும், அடர் புகையும் ஏற்படும். அதுபோல தான் ஷாரிக் கொண்டு வந்த குக்கர் வெடிகுண்டில் டெட்டனேட்டர் வெடிக்காமல் ஜெல் மட்டும் தீப்பிடித்து அடர்புகையும் ஏற்பட்டுள்ளது.

டெட்டனேட்டர் மற்றும் ஜெல் இரண்டும் ஒரே நேரத்தில் தீப்பிடித்திருந்தால், நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பேரழிவை ஏற்படுத்தி இருக்கும். குண்டு வெடிப்பில் சிக்கிய ஆட்டோ வெடித்து சிதறி தூள் தூளாகி இருக்கும் என்றும், சுற்றியிருந்த வாகனங்கள் சேதமடைந்து உயிரிழப்பும், பாதிப்பும் பெரிய அளவில் இருந்திருக்கும். ஷாரிக் தயாரித்து இருந்த குக்கர் வெடிகுண்டு ஒரு பஸ்சை வெடிக்கச் செய்யும் திறன் கொண்டது என்று கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com