அதிர்ச்சி சம்பவம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ... பெண் உடைகளை மாட்டி முதியவரை எரித்து கொன்ற பெண்


அதிர்ச்சி சம்பவம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ... பெண் உடைகளை மாட்டி முதியவரை எரித்து கொன்ற பெண்
x

முதியவரை கொன்று எரித்து நாடகமாடிய இளம்பெண் கள்ளக்காதலனுடன் போலீசில் சிக்கினார்.

பதான்,

குஜராத்தின் பதான் மாவட்டத்தில் உள்ள ஜகோத்ரா கிராமத்தில் வசிக்கும் சுரேஷ் கெங்கா பீமா அஹிர் என்பவர், நேற்று முன் தினம் தனது மூன்று வயது மகனின் அழுகை சத்தம் கேட்டு எழுந்தார். அவர் தனது மனைவி கீதாவை அழைத்தார், ஆனால் எந்த பதிலும் இல்லை. இதனால் பதற்றமடைந்த சுரேஷ் படுக்கையில் இருந்து எழுந்து அவளை தேடத் தொடங்கினார்.

அவர் தனது வீட்டிற்கு வெளியே கால் வைத்தபோது, ஒரு காட்சி சுரேசை அதிர்சிக்குள்ளாகியது. அடையாளம் தெரியாத ஒருவரின் பகுதியளவு எரிந்த உடல் அவரது கொல்லைப்புறத்தில் கிடந்தது. இறந்த நபர் ஆரஞ்சு மற்றும் ஊதா நிற காக்ரா-சோளி உடையணிந்து, வெள்ளி கொலுசு அணிந்திருந்தார். அந்த ஆடைகள் மற்றும் நகைகள் அவரது 22 வயது மனைவி கீதாவுக்கு சொந்தமானது என்பதால் சுரேஷ் அதிர்ச்சி அடைந்தார்.

இதனால் கீதா, இறந்துவிட்டதாக நினைத்து அந்த உடலை எடுத்து வீட்டுக்கு கொண்டு சென்றபோது, அது ஆணின் உடல் என்று தெரியவந்தது. பின்னர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார் நேற்று காலையில் பலன்பூர் ரெயில் நிலையத்தில் கீதா (வயது 22) மற்றும் அவரது காதலன் பாரத் அகிர் (21) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

தாங்கள் சேர்ந்து வாழ்வதற்காக இந்த கள்ளக்காதல் ஜோடி, பெரிய நாடகமாடிய தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தது. இதன்படி, எரிந்த நிலையில் மீட்கப்பட்ட உடல், 56 வயதான ஹர்ஜிபாய் சோலங்கி என்ற ஆணின் உடல் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அவர் சந்தால்பூர் தாலுகாவை சேர்ந்த வவ்வா கிராமத்தை சேர்ந்தவர். ஊர்ஊராக நாடோடியாக சுற்றி வாழ்ந்த அவர், இந்த கள்ளக்காதல் ஜோடியின் திட்டத்துக்கு பலியாகிப் போனது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

ஏற்கனவே திருமணமான கீதா, பரத்தை தீவிரமாக காதலித்து வந்துள்ளார். அவருடன் நிரந்தரமாக சேர்ந்து வாழ்வதற்காக என்ன செய்வது என்று யோசித்தபோது, திரிஷ்யம் பட பாணியில் ஒரு கொலையை ரகசியமாக அரங்கேற்ற திட்டமிட்டு உள்ளனர்.

தான் இறந்துவிட்டதாக மற்றவர்களை நம்பவைத்துவிட்டு, தனது காதலனுடன் சென்று நிம்மதியாக வாழ்வதுதான் கீதாவின் திட்டம். அதற்காக சரியான நபரைத் தேடியபோது, நாடோடியாக திரிந்த ஹர்ஜிபாயை தேர்வு செய்துள்ளனர்.

பரத், அவருக்கு லிப்ட் கொடுப்பது போல அழைத்து வந்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், கீதா, ஹர்ஜிபாய் உடலுக்கு, தனது பெண் உடைகளை அணிவித்து, கொலுசையும் மாட்டிவிட்டு உடலை எரித்து உள்ளனர்.

தங்கள் திட்டப்படி எல்லாவற்றையும் அரங்கேற்றிவிட்டு, ரெயிலில் ராஜஸ்தானுக்கு தப்பிச் செல்லும் திட்டத்துடன் காத்திருந்தவர்களை போலீசார் கைது செய்து உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story