லாரி மீது காரை மோதவிட்டு கள்ளக்காதல் ஜோடி தற்கொலை

கள்ளக்காதல் ஜோடி தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாரி மீது காரை மோதவிட்டு கள்ளக்காதல் ஜோடி தற்கொலை
Published on

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் அடூர் நூரநாடு பகுதியை சேர்ந்தவர் அனுஜா (வயது 36). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று அனுஜா தன்னுடன் பள்ளியில் வேலை பார்த்து வரும் சக ஆசிரியர்களுடன், திருவனந்தபுரத்திற்கு சுற்றுலா சென்றார்.

பின்னர் சுற்றுலா சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார். அப்போது வழியில் கொட்டாரக்கரை அருகே வந்தபோது வாகனத்தை வழி மறித்த அனுஜாவின் நண்பரான சாரும்மூடு பகுதியை சேர்ந்த ஹாசிம் (35) என்பவர் அனுஜாவை அழைத்து கொண்டு காரில் புறப்பட்டார்.

அவர்கள் நள்ளிரவு 12 மணியளவில் காயங்குளம்-புனலூர் சாலையில் பட்டாழிமுக்கு சந்திப்பில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த சரக்கு லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் 2 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், விபத்தில் பலியான இருவருக்கும் ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில் இருவரும் வீட்டிற்கு தெரியாமல் ரகசியமாக நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.

மேலும் சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிய அனுஜாவை, ஹாசிம் வலுக்கட்டாயமாக அழைத்து சென்றதாகவும், இதனால் சக ஆசிரியர்கள் சிறிது நேரம் கழித்து அனுஜாவுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்போது அவர் நாங்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்ளப்போகிறோம் என்று அழுதபடி கூறியதாக அனுஜாவுடன் பணிபுரிந்த சக ஆசிரியர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனால் அனுஜா மற்றும் ஹாசிம் ஆகிய இருவரும் காரை லாரியில் மோதச்செய்து தற்கொலை செய்திருப்பது உறுதியாகி உள்ளது. ஆனால் அவர்கள் ஏன் தற்கொலை செய்தார்கள் என்பது தெரியவில்லை. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com