

ஜபல்பூர்,
மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் நகரில் கொள்ளை வழக்கு ஒன்றில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், கைதிகள் இருவரையும் விலங்கிட்டு சாலையில் ஒன்றாக நடந்து வரும்படி அழைத்து சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நாட்டில் தொற்று தீவிரமுடன் பரவி வரும் சூழலில் பாதிப்புள்ள கைதியை சக கைதியுடன் அழைத்து சென்றதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
இதுபற்றி கைதிகளை அழைத்து சென்ற அதிகாரி கூறும்பொழுது, கைதிகள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதன்பின் அவர்கள் இருவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில், ஒருவருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. எங்களுடைய வாகனம் பழுதடைந்து நின்று விட்டது. அதனால், அவர்கள் இருவரையும் சிறைக்கு நடத்தி கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது என கூறியுள்ளார்.