

ஐதராபாத்
நரி ஒருபோதும் புலியாக முடியாது என பி.ஆர்.எஸ். கட்சி செயல் தலைவரை தெலுங்கானா முதல்-மந்திரி கடுமையாக விமர்சித்துள்ளார்.
தெலுங்கானா முதல்-மந்திரியாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரேவந்த் ரெட்டி பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், விகாராபாத் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியபோது, பாரதீய ராஷ்டீரிய சமிதி கட்சியின் செயல் தலைவரான கே.டி. ராமராவை கடுமையாக விமர்சித்து பேசினார்.
அவர் பேசும்போது, இன்னொரு அரசியல் தலைவரின் தோற்றம் அல்லது ஸ்டைலை பின்பற்றினால், அது மக்களின் நம்பிக்கையை பெற உதவாது என்றார். கே.டி. ராமராவ், மீசை மற்றும் தாடியை தற்போது வளர்த்து வருகிறார்.
இதனை குறிப்பிட்டே ரேவந்த் ரெட்டி பேசியுள்ளார். முன்பு, மீசையை முழுவதும் வழித்து காணப்பட்ட கே.டி. ராமராவ், சமீப நாட்களாக ரேவந்த் ரெட்டியை போன்று மீசை, தாடியுடன் காட்சி தருகிறார். அதனை குறிப்பிடும் வகையில், புலியை போன்று கோடு வரைந்து கொண்டால், நரி புலியாக மாற முடியாது. தாடி வளர்த்து கொண்டால் நீங்கள் ரேவந்த் ரெட்டியாகி விட முடியாது என்றார்.
ஒரு தாடியை வளர்க்க அவருக்கு 50 ஆண்டுகள் ஆகி விட்டன. கொஞ்சம் அறிவு வருவதற்கு இன்னும் எத்தனை வருடங்கள் ஆகும் என்று யாருக்கு தெரியும்? என்றும் கிண்டலாக கூறினார். இதனை தெலுங்கானா முதல்-மந்திரியின் அலுவலகம் வெளியிட்ட செய்தி தெரிவிக்கின்றது.