வீடு புகுந்து பெற்றோரை தாக்கி, இளம் பெண் மருத்துவரை கடத்திய கும்பல்; பரபரப்பு வீடியோ

தெலுங்கானாவில் வீடு புகுந்து பெற்றோர், உறவினர்களை தாக்கி விட்டு, இளம் பெண் மருத்துவரை 100 பேர் கொண்ட கும்பல் கடத்திய பரபரப்பு வீடியோ வெளிவந்துள்ளது.
வீடு புகுந்து பெற்றோரை தாக்கி, இளம் பெண் மருத்துவரை கடத்திய கும்பல்; பரபரப்பு வீடியோ
Published on

ஐதராபாத்,

தெலுங்கானாவின் ரெங்கா ரெட்டி மாவட்டத்தில் துர்கயாம்ஜல் நகராட்சி பகுதியில் அடிபட்லா என்ற இடத்தில் குடும்பத்துடன் வசித்து வருபவர் வைஷாலி (வயது 24). மருத்துவராக உள்ளார்.

இந்த நிலையில், இவரது வீட்டுக்கு திடீரென 100 பேர் கொண்ட கும்பல் புகுந்துள்ளது. அவர்கள் வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் சூறையாடி விட்டு, படுக்கையறையில் இருந்த பெண் மருத்துவரை காரில் கடத்தி சென்று விட்டது.

அவர்களை தடுக்க முயன்ற பெற்றோரையும் அந்த கும்பல் கம்புகள், கட்டைகளை கொண்டு கடுமையாக தாக்கியுள்ளது. இதில், அவரது தந்தை படுகாயமடைந்து உள்ளார். சாலையில் இருந்த கார் ஒன்றும் தாக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி ரச்சகொண்டா கூடுதல் காவல் ஆணையாளர் சுதீர் பாபு தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். காதல் விவகாரத்தில் வைஷாலியை கடத்தியிருக்க கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தொழிலதிபர் ஒருவர் மீது பெண்ணின் பெற்றோர் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். இந்த நிலையில், பெற்றோரை தொடர்பு கொண்ட வைஷாலி நலமுடன் உள்ளேன் என கூறியுள்ளார்.

இதனை அடுத்து, போலீசார் பாதுகாப்புடன் மகளை பார்ப்பதற்காக அவரது தந்தை சென்றுள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com