

லக்னோ,
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் வளாகத்தை நூற்றுக்கணக்கான குரங்குகள் கூட்டமாக ஆக்கிரமித்துள்ளதால், அங்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கடும் பீதியடைந்துள்ளனர்.
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ளது. இங்கு தினமும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த நிலையில் நேற்று (வியாழக்கிழமை) தாஜ்மஹாலின் கிழக்கு, மேற்கு மற்றும் ராயல் நுழைவாயில்களைச் சுற்றியுள்ள புல்வெளிப் பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குரங்குகள் கூட்டமாக சுற்றித் திரிந்தன.
இந்த குரங்குகள் சுற்றுலா பயணிகளின் கைகளில் உள்ள உணவுப் பொருட்கள் மற்றும் பைகளைப் பறிப்பதற்காக அவர்களை ஆக்ரோஷமாகத் துரத்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பதிவாகியுள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள் நாலாபுறமும் அலறியடித்து ஓடினர்.
தாஜ்மஹால் வளாகத்தில் குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் தென் கொரியாவைச் சேர்ந்த பெண் சுற்றுலா பயணி ஒருவரும், செப்டம்பர் மாதம் பிரேசில் நாட்டைச் சேர்ந்த 83 வயது முதியவர் உட்பட இருவரும் குரங்குகள் கடித்து படுகாயமடைந்தனர்.
தாஜ்மஹால் உள்ளே உணவுப் பொருட்களைக் கொண்டு செல்லத் தடை இருப்பதால், பயணிகள் நுழைவாயில் குப்பைத் தொட்டிகளில் உணவை வீசிவிட்டுச் செல்கின்றனர். இதனைத் தேடி வரும் குரங்குகள் அங்கு முகாமிட்டுள்ளன. நிலைமையைக் கட்டுப்படுத்த, பாதுகாப்புப் படையினருக்கு உண்டிகோல்கள் வழங்கப்பட்டுள்ளதோடு, குரங்குகளை விரட்ட 15 அல்ட்ராசோனிக் கருவிகளைப் பொருத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.