

மும்பை,
மும்பையில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக வொர்லியில் உள்ள போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று நள்ளிரவு 12.30 மணியளவில் மெசேஜ் வந்துள்ளது. அதில் மும்பை நகரின் 6 முக்கிய இடங்களில் குண்டுகள் வெடிக்கும் என்று தகவல் வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என்று தெரியவில்லை. அந்த நபரை கண்டுபிடிக்கும் முயற்சியில் பேலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அவர் எங்கிருந்து பேசினார் என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து மும்பை நகரம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, மோப்ப நாய்களின் உதவியுடன் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல் மும்பை விமான நிலையங்களிலும், மும்பையில் உள்ள பல முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த மிரட்டல் பதிவை வெளியிட்ட நபர் யார் என்பதை கண்டறியும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.