

புதுடெல்லி,
உணவு ஒவ்வாமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய தடுப்பூசியை டென்மார்க் தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்உருவாக்கியுள்ளனர். மெசஞ்சர் ஆர்.என்.ஏ. (mRNA) தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தடுப்பூசி, பீச் பழம் மற்றும் சில வகை நட்ஸ்களில் காணப்படும் ஒவ்வாமைத் தூண்டிகளை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கொரோன தடுப்பூசிகளில் பயன்படுத்தப்பட்ட அதே மூலக்கூறுகள் தான் இதிலும் பயன்படுத்தப்படுகிறது. நோயாளிகளுக்கு உண்மையான ஒவ்வாமைப் பொருளைக் கொடுப்பதற்குப் பதிலாக, அந்தப் புரதங்களை எவ்வாறு கையாள்வது என்ற வழிமுறையை உடலுக்கு வழங்குகிறது. இதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் தூண்டப்பட்டு, தொடர்புடைய பல உணவுப் புரதங்களை அடையாளம் கண்டு தடுக்கும் பாதுகாப்பு ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்கிறது.
முதற்கட்டமாக எலிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், பல்வேறு உணவு ஒவ்வாமைகளுக்கு எதிரான பாதுகாப்பு ஆன்டிபாடிகளை உருவாக்குவதில் இந்தத் தடுப்பூசி நம்பிக்கைக்குரிய முடிவுகளை அளித்துள்ளது. தடுப்பூசி போடப்பட்ட எலிகளில் உருவான ஆன்டிபாடிகள், மனித நோயாளிகளின் இரத்த மாதிரிகளில் ஒவ்வாமை எதிர்வினைகளைத் தடுப்பதை ஆய்வகச் சோதனைகள் உறுதிப்படுத்தியுள்ளன. தற்போது மனிதர்களிடம் பரிசோதனை செய்வதற்கான அடுத்தகட்ட ஆயத்தப் பணிகளில் ஆராய்ச்சிக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.